

கெய்ரோ: ஈரானில் பல இடங்களை குறிவைத்து அமெரிக்கா நேற்று முன்தினம் இரவு மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் பல இடங்களில் உள்ள ஏவுகணை மற்றும் டரோன் மையங்கள், கண்காணிப்பு மையங்கள், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன.
ஈரான் மீது தொடர்ந்து 2 வாரங்களாக தாக்குதல் நடத்தி வந்த அமெரிக்கா, ஆயுதக் கையிருப்பு குறைந்ததால் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைத்திருந்தது. ஈரானுக்கு ஆதரவாக ஈராக்கில் செயல்படும் ஹவுதி தீவிரவாத அமைப்புகள், சவுதி அரேபியா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தின.
இதனால் சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் இணைந்து ஈராக்கில் உள்ள ஹவுதி தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. இதில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை குறிவைத்து ஈரான் 5 ஏவுகணைகளை வீசியது. இவற்றை ஜோர்டான் வான் பாதுகாப்பு கருவிகள் நடுவானில் அழித்தன.
ஈரானின் இந்த எதிர்பாராத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு ஈரான் மீது அமெரிக்க ராணுவம் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. இதில் ஈரானின் பல இடங்களில் உள்ள ஏவுகணை மற்றும் ட்ரோன் மையங்கள், கண்காணிப்பு மையங்கள், ராணுவ தளங்கள் ஆகியவை அழிக்கப்பட்டன.
குவைத் மீது தாக்குதல்:
இதையடுத்து குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் சீன நிறுவனத்தின் கட்டிடம் சேதம் அடைந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். எகிப்து நாட்டின் டமேட்டா துறைமுகத்தில் நின்றிருந்த 2 எரிவாயு கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடத்தியது யார் என உடனடியாக தெரியவில்லை.