

வாஷிங்டன்: நைஜீரியா நாட்டில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் மூத்த தலைவர் அபு பிலால் (44) கொல்லப்பட்டார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆழமாக கால் ஊன்றி நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. நைஜீரிய மக்கள் தொகையில் 54% பேர் கிறிஸ்தவர்கள், சுமார் 46% பேர் முஸ்லிம்கள். அந்த நாட்டின் வடகிழக்கு பகுதியான லேக் சாத் பிராந்தியத்தில் சுமார் 7,000 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர். அவர்களின் தலைவராக அபு பிலால் செயல்பட்டு வந்தார்.
தற்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவராக அபு ஹப்ஸ் அல்- ஹாமிஷி அல் - குராஷி உள்ளார். அவருக்கு அடுத்து 2-வது மிகப்பெரிய தலைவராக அபு பிலால் இருந்தார். நைஜீரியாவில் வாழும் கிறிஸ்தவர்களை குறிவைத்து அவர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்தார். இதன் காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் நைஜீரியாவில் 50,000-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிட நைஜீரிய ராணுவ வீரர்களுக்கு அமெரிக்காவின் சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சுமார் 100-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் நைஜீரியாவில் முகாமிட்டு உள்ளனர்.
இந்த சூழலில் சுமார் 2,000 கி.மீ. தொலைவு நீளம் கொண்ட லேக் சாத் ஏரிப் பகுதியின் குறிப்பிட்ட ஒரு தீவில் அபு பிலால் பதுங்கியிருப்பதாக அமெரிக்க உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அமெரிக்க ராணுவம் மற்றும் நைஜீரிய ராணுவம் இணைந்து அந்த தீவை நேற்று முன்தினம் இரவு சுற்றிவளைத்து தாக்குதலை நடத்தின. இதில் ஐஎஸ்ஐஎஸ் மூத்த தலைவர் அபு பிலால் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அபு பிலாலை அழித்திருக்கிறோம். இதன் மூலம் உலக அளவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கிறது’’ என கூறியுள்ளார்.