

நியூயார்க்: அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் பனிப்புயல் பாதிப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஆர்கன்சஸ் முதல் நியூ இங்கிலாந்து பகுதி வரை சுமார் 2,100 கிலோமீட்டர் பரப்பளவுக்கு சுமார் 1 அடி உயரத்துக்கு பனி சூழ்ந்துள்ளது. இதனால் சாலை மற்றும் வான் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இந்த பகுதியில் மின் வசதியின்றி கடும்குளிரான சூழலில் மக்கள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பனிப்பொழிவால் மின் கம்பங்கள் மற்றும் மின்சாரத்தை கடத்தும் கம்பிகள் சேதமடைந்துள்ளதாக மின்தடை குறித்து தகவல் அளிக்கும் poweroutage.com தெரிவித்துள்ளது.
பனிப்புயல் காரணமாக சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் சுமார் 8 பேர் வீட்டை விட்டு வெளியில் வந்திருந்த போது உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிட்ஸ்பர்க் பகுதியின் வடக்கே மைனஸ் 31 டிகிரி செல்சியஸ் என்ற சூழல் நிலவுவதாக அந்நாட்டின் தேசிய வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது. ஓஹியோ, டெக்சாஸ், மாசசூசெட்ஸ், மிசிசிப்பி, டென்னசி உள்ளிட்ட பகுதிகளிலும் பனிப்புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 1994-க்கு பிறகு மிக மோசமான பனிப்புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்வை, குடிநீர் மற்றும் ஜெனரேட்டர்களுடன் பனியின் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள பாதுகாப்பு நிலையங்களுக்கு அதிகாரிகள் சென்றுள்ளதாக தகவல்.
8,000 விமானங்கள் ரத்து: மோசமான வானிலை காரணமாக அமெரிக்கா முழுவதும் சுமார் 8,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் சுமார் 45 சதவீத விமான சேவைகள் ரத்தாகின. இந்நிலையில், பனியின் தாக்கம் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.