

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையில் நேற்று முன்தினம் அந்த நாட்டின் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: ஈரானில் அடுத்தடுத்து இரண்டு அரசுகள் மறைந்துவிட்டன. தற்போது 3-வது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
அவர்கள் தற்போதைய சூழலை நன்றாக புரிந்து கொண்டு உள்ளனர். ஈரானில் பணவீக்கம் 250% அதிகரித்து இருக்கிறது. அந்த நாட்டின் பொருளாதாரம் முழுமையாக சீர்குலைந்திருக்கிறது. அவர்களின் கரன்சி மதிப்பிழந்துவிட்டது. அமெரிக்காவின் சிறப்பு தூதர்கள் ஸ்டீவ் விட்காப், ஜெராட் குஷ்னர் ஆகியோர் ஈரான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானிடம் இருக்கிறது. அந்த யுரேனியத்தை ரஷ்யாவிடமோ, சீனாவிடமோ வழங்கும் திட்டத்தை அமெரிக்கா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்கவே அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால் சர்வதேச அணு சக்தி ஆணையத்தின் மேற்பார்வையில் யுரேனியத்தை அழிக்க வேண்டும்.
இதுதொடர்பாக ஈரான் தரப்பில் அமெரிக்காவுடன் விரைவில் ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் அல்லது அந்த நாடு மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். நாங்கள் எங்கள் பணியை நிறைவு செய்வோம். ஹார்முஸ் ஜலசந்தியை ஈரானோ அல்லது ஓமனோ கட்டுப்படுத்த முடியாது. தவறான பாதையில் ஓமன் சென்றால் அந்த நாட்டின் மீதும் குண்டுகளை வீசுவோம்.
அமெரிக்காவில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தல் குறித்து நான் கவலைப்படவில்லை. அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டேன். அமெரிக்காவின் நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பேன். இவ்வாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.