

வாஷிங்டன்: ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ஹார்முஸ் ஜலசந்தியில் தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் திட்டமிட்டு உள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது.
இந்த இரு வார போர் நிறுத்தம் கடந்த 23-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அன்றைய தினம் காலவரையின்றி போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார்.
போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் மூடியுள்ளது. இதேபோல இந்த ஜலசந்தியின் இருபுறமும் அமெரிக்க போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “காலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஈரான் தரப்பு விரைந்து முடிவு எடுக்க வேண்டும்’’ என்று எச்சரித்துள்ளார்.
ஈரான் உச்ச தலைவர் மோஜ் தபா காமேனி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஈரான் தேசப்பற்றாளர்களின் ஒற்றுமையால் எதிரிகளின் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. ஈரான் மக்களின் மனதில் அச்சத்தை விதைக்க எதிரி நாடு முயற்சி செய்கிறது. இதற்கு இடம் கொடுக்கக் கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய பாகிஸ்தான், துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: சீனாவில் இருந்து ஈரானுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை முழுமையாக முடக்கி உள்ளோம்.
ஈரானின் சரக்கு கப்பல்களை அடுத்தடுத்து கைப்பற்றி வருகிறோம். இதனால் ராணுவ, பொருளாதார ரீதியிலான நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கிறோம். ஒருவேளை அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ஹார்முஸ் ஜலசந்தியில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும். தற்போது 19 போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கில் முகாமிட்டு உள்ளன.
மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் வீசப்பட்டு உள்ள கண்ணிவெடிகளை படிப்படியாக அகற்றி வருகிறோம். மேலும் கண்ணிவெடிகளை வீசும் ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டு உள்ளார். இவ்வாறு அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.