

வாஷிங்டன்: எச்1பி விசா கட்டண உயர்வை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 1990-ம் ஆண்டில் எச்1பி விசாவை அமெரிக்க அரசு அறிமுகம் செய்தது. இதன்மூலம் அமெரிக்க நிறுவனங்கள், திறன்வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்களை தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தி வருகின்றன. எச்1பி விசாவுக்கான கட்டணம் 1,000 டாலர் முதல் 7,500 டாலராக (ரூ.1 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை) இருந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், எச்1 பி விசாவுக்கான கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக (ரூ.95 லட்சம்) உயர்த்தினார். இதற்கு அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள், ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த சூழலில் எச்1பி விசா கட்டண உயர்வை எதிர்த்து கலிபோர்னியா, மாசசூசெட்ஸ், அரிசோனா, கொலராடோ, கனெக்டிகட், டெலவெயர், ஹவாய், இலினாய், மேரி லேண்ட், மிக்சிகன், மினசோட்டா உள்ளிட்ட 20 மாகாண அரசுகள் சார்பில் மாசசூசெட்ஸ் மாகாண பெடரல் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி லியோ டி சொரோகின் விசாரித்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். “அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதி இன்றி எச்1பி விசா கட்டணத்தை அதிபர் ட்ரம்ப் உயர்த்தி உள்ளார். இது சட்டவிரோதமானது. எனவே எச்1பி விசா கட்டண உயர்வு ரத்து செய்யப்படுகிறது’’ என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “பெடரல் நீதிமன்ற நீதிபதிகள் பெரும் சவாலை அளித்து வருகின்றனர். நீதிமன்ற நடைமுறைகளுடன் போராடுவது பெரும் தொல்லையாக உள்ளது. நமது நாட்டின் நலனுக்கு எதிராக நீதிபதிகள் செயல்படுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது’’ என்றார்.
அமெரிக்க உள்துறை செயலாளர் மார்க்வெய்ன் முல்லின் கூறும்போது, “நாட்டு மக்கள், குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அதிபர் ட்ரம்ப் செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவின் வேலைவாய்ப்புகளை வெளிநாட்டினர் தட்டிப் பறிப்பதை தடுக்கவே எச்1பி விசா கட்டணம் உயர்த்தப்பட்டது.
வெளிநாட்டினரால் நாடு முழுவதும் குற்றங்கள் பெருகுகின்றன. நாட்டின் கலாச்சாரம் சீர்குலைகிறது’’ என்றார்.
அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் கூறும்போது, “எச்1பி விசா கட்டண உயர்வு தொடர்பான மாசசூசெட்ஸ் மாகாண பெடரல் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். இந்த மேல்முறையீட்டு வழக்கில் அமெரிக்க மக்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறோம்’’ என்றார்.
அமெரிக்க அரசு சார்பில் ஓராண்டில் 65,000 வெளிநாட்டிருக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாக்களை பெறுவோரில் 73 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர். மாசசூசெட்ஸ் மாகாண பெடரல் நீதிமன்ற தீர்ப்பை இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் முழுமனதோடு வரவேற்று உள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்காவில் பணியாற்றும் குல்தீப் குமார் கூறும்போது, “அமெரிக்காவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவமனைகள், நிதி நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள் இந்திய நிபுணர்களை அதிக அளவில் பணியில் அமர்த்தி வருகின்றன. எச்1பி விசாவால் அமெரிக்க நிறுவனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தற்போதைய நீதிமன்ற உத்தரவை அமெரிக்க நிறுவனங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளன’’ என்றார்.