“அயோத்துல்லா அலி காமேனி தியாகத்தின் விளைவே போர் நிறுத்தம்!” - ஈரான் அதிபர்

“அயோத்துல்லா அலி காமேனி தியாகத்தின் விளைவே போர் நிறுத்தம்!” - ஈரான் அதிபர்
Updated on
1 min read

தெஹ்ரான்: மாபெரும் தியாகத் தலைவரான அயத்துல்லா அலி காமேனி சிந்திய ரத்தத்தின் விளைவாகவும், மக்களின் ஒற்றுமை காரணமாகவுமே இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்து வந்த போர், இன்று முதல் இரண்டு வார காலத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மேற்கொண்ட சமரச முயற்சியை அடுத்து, இந்த போர் நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இந்நிலையில், இந்த போர் நிறுத்த அறிவிப்பு தொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் முதல்முறையாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “போரில் கொல்லப்பட்ட நமது மாபெரும் தியாகத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி சிந்திய ரத்தத்தின் விளைவாகவும், களத்தில் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு நின்றதன் காரணமாகவும் ஈரான் விரும்பிய கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இன்றில் இருந்து, நாம் தொடர்ந்து ஒன்றிணைந்தே இருப்போம். அது ராஜதந்திர துறையாக இருந்தாம் சரி, தற்காப்புத் துறையாக இருந்தாம் சரி, வீதிகளில் நடைபெறும் போராட்டக்களமாக இருந்தாலும் சரி, சேவை வழங்கும் தளமாக இருந்தாலும் சரி அனைத்திலும் நாம் ஒன்றிணைந்தே இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த போர் நிறுத்தத்தை அடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், “உலக அமைதிக்கு இது ஒரு மகத்தான நாள். ஈரானும் இதைத்தான் விரும்புகிறது. அவர்களுக்குப் போதும் என்றாகிவிட்டது. மற்ற அனைவருக்கும்கூட அதே நிலைதான். ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கையாள்வதில் அமெரிக்கா உதவும். அங்கு ஏராளமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் நடைபெறும். பெரும் பொருளாதார ஆதாயத்தை ஈட்ட முடியும்.

ஈரான் தனது மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்க முடியும். அனைத்தும் சிறப்பாக நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, நாங்கள் அனைத்து வகையான விநியோகப் பொருட்களையும் திரட்டிக்கொண்டு அங்கே காத்திருப்போம். அனைத்தும் சிறப்பாகவே நடக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அமெரிக்காவில் நாம் தற்போது அனுபவித்து வருவதைப் போலவே மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இது ஒரு பொற்காலமாக அமையக்கூடும்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“அயோத்துல்லா அலி காமேனி தியாகத்தின் விளைவே போர் நிறுத்தம்!” - ஈரான் அதிபர்
அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம்: இந்தியா வரவேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in