புதுடெல்லி: அமெரிக்கா - ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எட்டப்பட்டுள்ள போர் நிறுத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். இது மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம். நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததைப் போலவே, தற்போது நடைபெற்று வரும் மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர பதற்றத்தைத் தணித்தல், பேச்சுவார்த்தை நடத்துதல், ராஜதந்திர அணுகுமுறை ஆகியவை இன்றியமையாதவை.
இந்த மோதல் ஏற்கெனவே மக்களுக்கு அளவற்ற துயரத்தை ஏற்படுத்திவிட்டது. அதோடு, உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தக சங்கிலிகளை சீர்குலைத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற கடல்வழிப் போக்குவரத்தும், உலகளாவிய வர்த்தக ஓட்டமும் தொடர்ந்து நிலவும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஈரானில் இன்னமும் தங்கி இருக்கும் இந்திய குடிமக்கள் உடனடியாக அந்நாட்டில் இருந்து வெளியேறுமாறு மத்திய அரசு வலியுறுத்தியது. இது தொடர்பாக டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், “ஏப்ரல் 7-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின் தொடர்ச்சியாகவும், அண்மையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளின் அடிப்படையிலும் ஈரானில் இன்னமும் தங்கி இருக்கும் இந்திய குடிமக்கள் தூதரகத்துடன் ஒருங்கிணைந்து, தூதரகம் பரிந்துரைக்கும் வழித்தடங்களைப் பயன்படுத்தி, ஈரானில் இருந்து உடனடியாக வெளியேற கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தூதரகத்துடன் முன்னரே கலந்தாலோசித்து ஒருங்கிணைக்காமல், எந்தவொரு சர்வதேச தரைவழி எல்லையையும் அணுகும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. தூதரகத்தின் அவசர உதவி எண்களான +989128109115; +989128109102; +989128109109; +989932179359 ஆகிய எண்களிலோ, cons.tehran@mea.gov.in என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியை அடுத்து அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார கால போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், “உலக அமைதிக்கு இது ஒரு மகத்தான நாள். ஈரானும் இதைத்தான் விரும்புகிறது. அவர்களுக்குப் போதும் என்றாகிவிட்டது. மற்ற அனைவருக்கும்கூட அதே நிலைதான். ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கையாள்வதில் அமெரிக்கா உதவும். அங்கு ஏராளமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் நடைபெறும். பெரும் பொருளாதார ஆதாயத்தை ஈட்ட முடியும்.
ஈரான் தனது மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்க முடியும். அனைத்தும் சிறப்பாக நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, நாங்கள் அனைத்து வகையான விநியோகப் பொருட்களையும் திரட்டிக்கொண்டு அங்கே காத்திருப்போம். அனைத்தும் சிறப்பாகவே நடக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அமெரிக்காவில் நாம் தற்போது அனுபவித்து வருவதைப் போலவே மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இது ஒரு பொற்காலமாக அமையக்கூடும்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.