அமெரிக்காவுக்கு ‘குட்பை’ சொல்லும் வளைகுடா நாடுகள்? - எடுபடாத ட்ரம்ப் வியூகமும் தாக்கமும்

அமெரிக்காவுக்கு ‘குட்பை’ சொல்லும் வளைகுடா நாடுகள்? - எடுபடாத ட்ரம்ப் வியூகமும் தாக்கமும்
Updated on
2 min read

வளைகுடா நாடுகளில் பல ஆண்டுகளாக ஆழமாகப் பதிந்திருந்த அமெரிக்காவின் அசைக்க முடியாத சுவடுகள், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கிவிட்டன.

“அமெரிக்காவே எங்களின் பாதுகாப்பு கவசம்” என்று சரணாகதியில் இருந்த வளைகுடா நாடுகள் இன்று அதிபர் ட்ரம்பின் ‘ராஜதந்திர’ நடவடிக்கைகளாலும் முரண்பட்ட பேச்சுகளாலும் பெரும் பொருளாதார மற்றும் உயிரழப்புகளைத் தாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ஒருபுறம் ஈரான் அச்சுறுத்தல், மறுபுறம் ஹார்முஸ் நீரிணைப் பாதை மூடப்பட்டதால் செங்கடல் பகுதியில் ஹவுதிகளின் தாக்குதல் என வளைகுடா அரசுகளும், அவற்றின் தொழில் துறையும் தவிக்கின்றன.

“அமெரிக்காவை நம்பி இனி பயனில்லை” எனக் கருதி, வளைகுடா நாடுகள் இப்போது மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கிவிட்டன. அமெரிக்க ராணுவத் தளங்களை நம்பியிருந்த காலம் போய் சீனா, ரஷ்யா மற்றும் புதிய பிராந்திய ஒப்பந்தங்களை நோக்கி வளைகுடா நாடுகள் நகரத் தொடங்கியுள்ளன.

வளைகுடா நாடுகள் விரும்பாத போர்: ஈரானுடன் அமெரிக்கா கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கிய போர் எப்போது முடிவுக்கு வரும் எனத் தெரியாமல் பல மாதங்களாக நீடிக்கிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் சப்ளையும் கடும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன.

உண்மையில், ஈரான் மீது அமெரிக்கா தொடுத்த இந்தப் போரை மேற்காசியாவில் உள்ள சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கதார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் விரும்பவில்லை. அமெரிக்கா போரைத் தொடங்கிவிட்டு, அதை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் திணறுவதைப் பார்த்தும், அதிபர் ட்ரம்ப்பின் முரணான பேச்சுகளாலும் இந்த ஐந்து நாடுகளும் வெறுப்பின் உச்சத்தில் உள்ளன என்று ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

“அமெரிக்காவின் ராணுவப் படையைத் தங்கள் நாட்டில் தங்கவைக்க ஏன் அனுமதியளித்தோம்?” என்று இந்த ஐந்து நாடுகளும் தங்களுக்குள்ளேயே கேள்வி எழுப்பிக்கொண்டுள்ளன. வளைகுடா நாடுகள் கூட்டணியின் முக்கிய அதிகாரி ஒருவர், “அதிபர் ட்ரம்ப் போரைத் தொடங்கினார். ஆனால், அதற்கான விலையை நாங்கள் கொடுக்கிறோம்” என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

யூரேசியா குழுமத்தின் ஆய்வாளர் பிராஸ் மக்காட் கூறுகையில், “அமெரிக்காவின் நட்பில் இருக்கும் வளைகுடா நாடுகள், ஈரானுடனான போரை ஒருபோதும் விரும்பவில்லை. ட்ரம்ப்பின் ஈரானுக்கு எதிரான கொள்கை நிலையற்றதாகவும், கணிக்க முடியாததாகவும் இருக்கிறது.

சவுதி அரேபியாவும் கத்தாரும் உலகிலேயே அதிக அளவில் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகின்றன. ஆனால், ஹார்முஸ் நீரிணை மூடல் மற்றும் ஏமனில் ஹவுதி படையினரின் தாக்குதலால் பாப் அல்-மன்தீப் பகுதி வழியாகச் செல்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் ஆகியவற்றால் ஏற்றுமதி மோசமாகச் சரிந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

கரையும் நம்பிக்கையும் சவுதியின் பாதிப்பும்: பல ஆண்டுகளாக வளைகுடாப் பகுதியில் முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவத்தைச் சகித்துக்கொண்டுதான் வளைகுநா நாடுகள் இருந்தன என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால், அமெரிக்க ராணுவம் இருந்தால் பிராந்தியப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என நினைத்த அந்நாட்டுகள், தற்போது ஈரானின் தாக்குதலுக்கு ஆளான பின், “ஏன் அமெரிக்க ராணுவத்துக்கு இடம் கொடுத்தோம்?” என்று வருந்துகின்றன.

அமெரிக்கா தன்னிச்சையாக ஈரானுடன் நடத்தும் போரினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பதும், அதிக அழுத்தத்தைச் சந்தித்திருப்பதும் சவுதி அரேபியாதான். ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதற்கு முன்பாக சவுதி அரேபியா தினசரி 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால், இப்போது அதில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே ஏற்றுமதி செய்ய முடிகிறது.

கச்சா எண்ணெய் விலையும் சர்வதேச சந்தையில் பேரல் 100 டாலரை எட்டிவிட்டது. ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகள் போரைத் தவிர்க்க முயன்றபோதிலும், அமெரிக்காவின் நிர்பந்தத்தால் போரில் அங்கம் வகிக்க இழுத்துச் செல்லப்பட்டன.

தோல்வியடைந்த ட்ரம்ப்பின் ராஜதந்திரம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தின் தெளிவற்ற உத்திகளே இந்தப் பிளவுக்குக் காரணம்.

ஆபிரகாம் ஒப்பந்தத்தால் அதிருப்தி: இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான உறவை இயல்பாக்க ‘ஆபிரகாம் ஒப்பந்தம்;, அதிபர் ட்ரம்பால் செய்யப்பட்டது. ஆனால், பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் இஸ்ரேலுக்கு ஆதரவளித்து பாலஸ்தீனத்தை தாக்கியது அரபு மற்றும் இஸ்லாமிய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரபு தலைவர்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ராஜாங்கரீதியான இடைவெளியை அதிகரித்துள்ளது.

ட்ரம்ப்பின் நிலையற்ற பேச்சு: ஈரான் விவகாரத்தில் ஒருநாள் ராணுவ எச்சரிக்கை விடுப்பது, மறுநாளே பேச்சுவார்த்தைக்கு அழைப்பது என ட்ரம்ப்பின் முரண்பாடான பேச்சு எதிரிகளை விட அமெரிக்காவின் நட்பு நாடுகளையே அதிகம் குழப்பத்துக்கு ஆளாக்கியுள்ளது.

மெக்கா உடன்படிக்கை: அமெரிக்கப் படையின் பாதுகாப்பை நம்பி எத்தனை நாட்களுக்குத்தான் இருப்பது என்று விரக்தியடைந்த சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தானுடன் சேர்ந்து சமீபத்தில் ‘மெக்கா ஒப்பந்தம்’ செய்து கொண்டன. எதிர்காலத்தில் அமெரிக்காவை மட்டும் தனித்துப் பாதுகாப்புக்காக நம்பியிருக்க முடியாது என்பதை உணர்த்துவதாகவும், பிராந்தியத்தில் தங்கள் பாதுகாப்பைத் தாங்களே உறுதிசெய்து கொள்ளவும் இந்த உடன்படிக்கை அமைந்துள்ளது.

சீனா, ரஷ்யாவுடன் நெருக்கம்: மேலும், வளைகுடா நாடுகளிடம் இருந்து பெருமளவில் கச்சா எண்ணெய் வாங்கும் சீனா மற்றும் ரஷ்யாவுடன் பொருளாதார, ராஜதந்திர உறவுகளை அரபு நாடுகள் தீவிரமாக வளர்த்து வருகின்றன.

அதிபர் ட்ரம்ப், ‘அமெரிக்காவே ஃபர்ஸ்ட்’ என்ற கொள்கையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும்போது, வளைகுடா நாடுகள் தங்கள் ‘சுய பாதுகாப்பு மற்றும் பிராந்திய இறையாண்மையே முதன்மை’ என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டன. அமெரிக்கா முழுமையாக வளைகுடாவை இழக்கவில்லை என்றாலும், இழக்கத் தொடங்கிவிட்டது. அரபு நாடுகள் தங்களின் சொந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கிவிட்டன என்பது மறுக்க முடியாத உண்மை.

அமெரிக்காவுக்கு ‘குட்பை’ சொல்லும் வளைகுடா நாடுகள்? - எடுபடாத ட்ரம்ப் வியூகமும் தாக்கமும்
ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கா ‘கைப்பற்றுவது’ சாத்தியமா? - ட்ரம்ப் மிரட்டலும் விளைவுகளும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in