

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தற்போது அமெரிக்காவில் வேலை அனுமதிக்கான கால வரம்பை 5 ஆண்டுகளில் இருந்து 18 மாதங்களாக குறைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குடியேற்றக் கொள்கை சீரமைப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, அடைக்கலம் கோருபவர்கள், அரசியல் அடைக்கலம் பெற்றவர்கள், கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் உட்பட பல புலம்பெயர்ந்த குழுக்களுக்கான குடியேற்ற விதிகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு வழங்கப்படும் வேலை அனுமதி ஆவணங்களின் (இஏடி) செல்லுபடியாகும் காலம் ஐந்து ஆண்டுகளிலிருந்து 18 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த காலவரம்பு குறைப்பு நடவடிக்கை புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப அடிக்கடி சோதனை நடத்த உதவும். மேலும் இதுபோன்ற குறுகிய கால அனுமதிகள், சாத்தியமான அச்சுறுத்தல்களை அடையாளம் காணவும், மோசடியைத் தடுக்கவும், அமெரிக்க எதிர்மறை சித்தாந்தங்களை ஊக்குவிக்கும் வெளிநாட்டினரை விரைவாக கண்டறிந்து அகற்றவும் உதவும். இவ்வாறு யுஎஸ்சிஐஎஸ் தெரிவித்துள்ளது.
இஏடி காலவரம்பு குறைக்கப்பட்டுள்ளது கிரீன் கார்டு விண்ணப்பதாரர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்பு காரணங்களை முன்னிறுத்தி ட்ரம்ப் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.