

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் உடனான தனது திருமணம் தொடர்பாக பரவிய செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக, ஸ்மிருதி மந்தனா, பலாஷ் முச்சல் இருவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும், திருமணம் பற்றியும் பல வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. இந்த நிலையில், ஸ்ம்ருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "என் சொந்த வாழ்க்கை பற்றிப் பேசுவது எனக்கு பிடிக்காது. ஆனால், ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். பலாஷ் முச்சல் உடனான எனது திருமணம் இப்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது. இது இரு குடும்பத்தினரும் பேசி எடுத்த முடிவு.
இந்த விஷயத்தை இங்கேயே முடித்துக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் இரு குடும்பத்தாருக்கும் இப்போது தனிமை தேவை. அதனால், எங்கள் முடிவை மதித்து, வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்கும்படி எல்லோரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஸ்மிருதி தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், “எனக்கு இப்போது என் நாடும், நாட்டுக்காக விளையாடுவதும்தான் முக்கியம். இந்திய அணிக்காக விளையாடி, வெற்றிக் கோப்பைகளை வெல்வதே என் வாழ்வின் மிகப் பெரிய இலக்காக இருக்கும். என் கவனம் முழுவதும் இப்போது கிரிக்கெட்டில் மட்டுமே இருக்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேபோல, பலாஷ் முச்சலும், தாங்கள் பிரிந்துவிட்டதாகக் கூறி தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளார். தவறான செய்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஸ்மிருதி மந்தனா விரைவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக களமிறங்க உள்ளார்.