சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியதற்காக ஈரான் மீது அமெரிக்கா குண்டு வீச்சு

சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியதற்காக ஈரான் மீது அமெரிக்கா குண்டு வீச்சு
Updated on
1 min read

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயன்ற எண்ணெய் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால், ஈரானின் பல இடங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த 17-ம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, ஹார்முஸ் ஜலசந்தியை கப்பல் போக்குவரத்துக்குத் திறக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சிங்கப்பூர் நாட்டு சரக்குக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை ஓமன் கடற்கரையை ஒட்டி கடக்க முயன்றது. தாங்கள் வழிகாட்டும் ஈரான் கடலோர பகுதி வழியாகத்தான் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க வேண்டும் என ஈரான் கட்டுப்பாடு விதித்தது. அதை மீறி ஒமன் கடலோர பகுதி வழியாக சென்ற சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் கடந்த 25-ம் தேதி ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் கிடங்குகள் மற்றும் கடலோர பகுதியில் உள்ள ரேடார் மையங்கள் மீது அமெரிக்க போர் விமானம் நேற்று குண்டு வீசியது. இந்த தாக்குதலின் 37 விநாடி வீடியோ காட்சிகளையும் அமெரிக்கா நேற்று வெளியிட்டது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த செய்தியில், ‘‘சரக்குக் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது முட்டாள்தனமான விதிமீறல். மிகப் பெரிய சரக்குக் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. மற்ற ட்ரோன்கள் எல்லாம் சுட்டு வீழ்த்தப்பட்டன’’ என்றார்.

அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஈரான் ராணுவம் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். அமெரிக்காவின் அத்துமீறல் தொடர்ந்தால், பதில் தாக்குதல் இன்னும் அதிகமாக இருக்கும்’’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியதற்காக ஈரான் மீது அமெரிக்கா குண்டு வீச்சு
3 நாள் அரசுமுறை பயணமாக சீஷெல்ஸ் சென்ற பிரதமர் மோடி உலகின் வயதான ஆமையை பார்வையிட்டார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in