

வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான போரில் 10 ஆயிரம் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளோம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்குமான போர் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதுகுறித்து அமெரிக்காவின் ராணுவ மத்திய கமாண்டை சேர்ந்த கடற்படை அட்மிரல் பிராட் கூப்பர் நேற்று கூறியதாவது: ஈரான் போரின்போது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கி அழித்துள்ளோம். இதில் பல்வேறு வெடிபொருட்கள் ஆலைகளும் அடங்கும். இதுதொடர்பான வீடியோக்களையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
நாங்கள் சாதித்தவற்றையும், அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் இணைந்து ஈட்டிய வெற்றியையும் இணைத்துப் பார்க்கும் போது இது நன்றாகத் தெரியும். எங்களின் துல்லியத் தாக்குதல்கள் ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகளை நிலைகுலையச் செய்துள்ளன. மேலும் எங்கள் போர் விமானங்கள் குறிப்பிடத்தக்க அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன.
ஈரானியக் கடற்படையின் மிகப்பெரிய கப்பல்களில் 92 சதவீதத்தை அமெரிக்கா அழித்துவிட்டது. இப்பகுதியிலும், உலகம் முழுவதிலும் தங்கள் கடற்படை வலிமையையும் ஆதிக்கத்தையும் ஈரான் இழந்துவிட்டது. அந்த அளவுக்கு அழிவை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளோம். ஈரானுக்குச் சொந்தமான மூன்றில் 2 பங்கு வெடிபொருட்கள் ஆலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுவரை ஈரானின் ஏவுகணை, ஆளில்லா விமானம் மற்றும் கடற்படை உற்பத்தி நிலையங்கள், கப்பல் கட்டும் தளங்கள் ஆகியவற்றில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானவற்றை நாங்கள் சேதப்படுத்தியுள்ளோம். ஆனாலும், எங்கள் பணி இன்னும் முடிவடையவில்லை. ஈரானின் பரந்து விரிந்த ராணுவ உற்பத்தி கட்டமைப்பை முழுமையாக அழிக்கும் பாதையை நோக்கி பயணித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.