

நியூயார்க்: ஈரான் பள்ளி மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி 175 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கொன்றது தவறான தாக்குதல் அல்ல போர்க் குற்றம் என்று ஐ.நா.வில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறினார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்தன. அப்போது ஈரானின் மினாப் நகரில் உள்ள தொடக்கப் பள்ளி மீது டொமஹாக் ஏவுகணை மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் 175 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்தனர். ஆனால், இந்த தாக்குதலை ஈரானே நடத்தியிருக்கலாம் என அதிபர் ட்ரம்ப் கூறினார். அதன்பின் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது உறுதியானது.
இதையடுத்து இது தவறாக நடைபெற்ற தாக்குதல் என கூறப்பட்டது. பழைய தரவுகளின் அடிப்படையில் ஈரான் ராணுவ தளம் இருந்த ஒரு பகுதியில் பள்ளி கட்டிடம் அமைந்திருந்ததால், தவறாக நடைபெற்ற தாக்குதல் என கூறப்பட்டது.
இந்நிலையில் ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி வீடியோ மூலம் நேற்று ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது: ஈரான் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. நவீன தொழில்நுட்பங்கள் மூலம் துல்லிய தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை கூறுகின்றன.
அப்படியிருக்கும்போது இது தவறான தாக்குதல் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். இந்த தாக்குதல் போர்க் குற்றம். இதற்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அராஜகத்தை நியாயப்படுத்தவும் முடியாது, மறைக்கவும் முடியாது. இவ்வாறு அராக்சி கூறினார்.