

பெனசிர் புட்டோ, பிலஹரி கவுசிகன்
சிங்கப்பூர்: ‘‘பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல்’’ என சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் சிங்கப்பூர் முன்னாள் தூதர் பிலஹரி கவுசிகன் கருத்து தெரிவித்து உள்ளார். சர்வதேச கருத்தரங்கம் ஒன்று நடந்த போது பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர், பாகிஸ்தானுக்கு அண்டை நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானால் பிரச்சினை ஏற்படுகிறது என கூறினார்.
அப்போது அந்த கருத்தரங்கில் பங்கேற்ற சிங்கப்பூர் முன்னாள் தூதர் பிலஹரி கவுசிகன் கூறியதாவது: பாகிஸ்தானின் பிரச்சினைகளுக்கு அதன் தலைவர்கள் மற்றும் ராணுவத்தின் தவறான நிர்வாகம்தான் காரணம். பாகிஸ்தான் பெரும்பாலான பிரச்சினைகளை தானாக தேடிக்கொள்கிறது. இதற்கெல்லாம் பாகிஸ்தான் இருப்பிடத்தை குறை கூற முடியாது. பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல். இதற்கு ஒரு சம்பவத்தை குறிப்பிட விரும்புகிறேன்.
கடந்த 1991-ம் ஆண்டு மலேசியாவில் இருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 4 பேரால் கடத்தப்பட்டது. அந்த விமானம் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது. கடத்தல்காரர்கள் விமானத்தில் ஆல்கஹாலை ஊற்றி பற்ற வைத்துவிடுவோம் என மிரட்டினர். அப்போது நான் வெளியுறவுத்துறையில் பணியாற்றியதால், கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டது.
கடத்தல்காரர்களின் கோரிக்கை குறித்து கேட்டபோது, அவர்கள் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவிடம் பேச வேண்டும் என கூறினர். அப்போது பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரிப் இருந்தார். பெனசிர் புட்டோ இஸ்லாமாபாத்தில் இல்லை. அவர் சிந்து பகுதியில் உள்ள தனது எஸ்டேட்டுக்கு சென்றுவிட்டார். பாகிஸ்தான் தூதர் மூலம் அவரது போன் எண்-ஐ பெற்று அதிகாலை 3 மணியளவில் தொடர்பு கொள்ள முயன்றேன்.
நான் நிலவரத்தை கூறி, பெனசிர் புட்டோவிடம் பேச வேண்டும் என கூறினேன். அதற்கு பதில் அளித்த நபர் ‘‘மேடம் தூங்கி கொண்டிருக்கிறார். அவரை தொந்தரவு செய்ய முடியாது’’ என தொடர்ந்து கூறினார். இதனால் வெறுப்படைந்து அந்த போன் இணைப்பை துண்டித்தேன். இறுதியில் எங்கள் கமாண்டோக்கள் விமானத்துக்குள் சென்று கடத்தல்காரர்கள் 4 பேரையும் சுட்டுக் கொன்று பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதனால் தீவிரவாதிகளின் கோரிக்கை என்ன என்று எங்களுக்கு இதுவரை தெரியாது. இவ்வாறு கவுசிகன் தெரிவித்தார்.