

புதுடெல்லி: இ-ரிக்ஷா பேட்டரிகளை ஷட் டவுன் செய்யும் 7 செயலிகளை ஆப் ஸ்டோரில் இருந்து நீக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், கூகுள் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குளத்தில் இருந்து அந்த செயலிகளை நீக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல். அதில் இந்த விவகாரம் தொடர்பாக மூன்று காரணங்களை அரசு சுட்டிக்காட்டி உள்ளதாக தெரிகிறது.
இந்த செயலிகளை தவறான வழியில் பயன்படுத்தி இ-ரிக்ஷா மற்றும் இதர மின்சார வாகனங்களின் பேட்டரியை செயலிழக்க செய்வது, வாகன பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது மற்றும் இதர தடங்கல் உள்ளிட்ட காரணங்கள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் BAT-BMS, SMART BMS, LOSSIGY உள்ளிட்ட செயலிகள் இந்த பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இ-ரிக்ஷா பேட்டரிகளை ஷட் டவுன் செய்யும் இரண்டு செயலிகள் குறித்து தங்கள் கவனத்துக்கு வந்ததாகவும். அந்த செயலிகள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கி உள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும், பொது பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் செயலிகளை ஆப் ஸ்டோர்கள் தானாக முன்வந்து நீக்க வேண்டுமென்று அவர் கூறியுள்ளதாக தகவல்.
பின்னணி என்ன?
டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இ-ரிக்ஷாக்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ளன. பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதை தங்களது வாழ்வாதாரமாக ஆயிரக்கணக்கானோர் நம்பியுள்ளனர். இந்த சூழலில்தான் சீன தேச செயலியான ‘BAT-BMS’ செயலியை பயன்படுத்தப்படுவதாக தகவல்.
இந்த செயலி மூலம் அருகில் உள்ள இ-ரிக்ஷாக்களின் லித்தியம் பேட்டரியை ப்ளூடூத் மூலம் கட்டுப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லித்தியம் பேட்டரியில் ப்ளூடூத் செயல்பாடு உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் ‘டிஸ்சார்ஜ் சுவிட்ச்’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து இ-ரிக்ஷா இயக்கம் நிறுத்தப்படுகிறது. சிலர் இதோடு சேர்த்து ‘சார்ஜ் சுவிட்ச்’யையும் ஆப் செய்கின்றனர். இதனால் இ-ரிக்ஷா இயக்கம் நிறுத்தப்படுகிறது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட விலை குறைவான பேட்டரிகளில் பாதுகாப்பு வசதிகள் பெரிய அளவில் இல்லாத காரணத்தால் 10 முதல் 15 மீட்டர் தூரத்தில் இருந்து இ-ரிக்ஷா பேட்டரியை கட்டுப்படுத்த முடிவதாக தகவல். இதன் மூலம் அந்த வாகனத்தின் மோட்டார் இயக்கத்துக்கு தேவையான பவர் நிறுத்தப்படுகிறது என்று வல்லுநர்கள் சிலர் விளக்கம் தந்துள்ளனர்.
இதை சிலர் வேடிக்கையாக தொடங்கியதாக தகவல். தற்போது அதன் தாக்கம் தீவிரமாகி உள்ளது. இந்த செயலியை கொண்டு கன்டென்ட் கிரியேட்டர்கள் சில வீடியோக்களை இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவு செய்துள்ளனர். ‘Tirris’, ‘Tirri Remote Control’ என்ற டேக்கில் இந்த வீடியோக்கள் இன்ஸ்டாவில் அணிவகுக்கின்றன.