

அரசியல் சதுரங்கத்தில் தீட்டப்படும் திட்டங்களுக்கும், எளிய மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் எப்போதும் ஒரு பெரிய இடைவெளி உண்டு. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எடுத்த தன்னிச்சையான ஓர் அரசியல் முடிவு, உக்ரைனை மட்டுமல்ல, ரஷ்யாவின் சாமானியர்களையும் சேர்த்துப் படுகுழியில் தள்ளியுள்ளது. ஒரு நாட்டின் நிலப்பரப்பைப் அதிகரிக்கத் துடிக்கும் ஆட்சியாளர்களின் ஒற்றைக் கையெழுத்து, கோடிக்கணக்கான மக்களின் அமைதியான வாழ்க்கையை எப்படி பட்டுப்போகச் செய்யும் என்பதற்கு உக்ரைன் மீதான போர் ஒரு சாட்சி.
அதிகார வெறியால் கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்தப் போர், தங்கள் நெஞ்சங்களில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தியுள்ளதாக ரஷ்ய மக்களே கூறுகிறார்கள். பெரும்பான்மையான ரஷ்யர்கள் தங்களின் சகோதர நாடான உக்ரைனுடன் போரை ஒருபோதும் விரும்பவில்லை. இந்தத் தேவையற்ற போர், இன்று ரஷ்யர்களை அகதிகளாகவும் குற்ற உணர்ச்சிக்கு ஆளானவர்களாகவும் மாற்றியுள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் வாழும் ரஷ்யர்கள் எதிர்கொள்ளும் சமூகப் புறக்கணிப்பும், ‘நாங்கள் கொலையாளியின் நாட்டிலிருந்து வருபவர்களா?’ என்ற கேள்வி எழுப்பும் கூட்டுக் குற்ற உணர்வும் அவர்களின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது.
வரலாற்றில் எப்போதுமே போர்களைத் தொடங்குபவர்கள் அரசர்களாகவும், அந்தப் போர்களின் குருதிக் கறையைத் துடைப்பவர்கள் அப்பாவி மக்களாகவுமே இருந்துள்ளனர். இது ரஷ்யாவிலும் தப்பவில்லை. போர்முனையில் சிந்தும் செங்குருதி ஒருபுறமிருக்க, ஐரோப்பாவின் எந்த மூலையில் ஒரு ரஷ்யர் தலைகுனிந்து நின்றாலும், அங்கு மவுனமாக உயிர்த்தெழுவது அவர்களின் ஆழ்மனக் குற்ற உணர்வுதான்.
ரஷ்ய மக்களின் நிலை:
உக்ரைன் - ரஷ்யா போர் 5-வது ஆண்டாகத் தொடர்கிறது. இந்தப் போர் புவிசார் அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் புதினின் அரசின் இந்த ராணுவ நடவடிக்கை, உலக நாடுகளின் கண்டனங்களைப் பெற்றதோடு, ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளையும் திணித்துள்ளது.
ஆனால், உண்மையில், அரசியல் மற்றும் பொருளாதார மோதல்களின் உண்மையான வலியைச் சுமப்பவர்கள் ஆட்சியாளர்களோ, அதிகாரத்தில் இருப்பவர்களோ இல்லை. மாறாக, இந்த அரசியலுடன் எந்தத் தொடர்பும் இல்லாத, வாக்களித்த சாதாரண ரஷ்ய மக்கள்தான். சர்வதேச அளவில் உருவான ‘பூகோள அரசியல் கறை’ அல்லது ‘ரஷ்யர் மீதான எதிர்மறை அடையாளம்’ தாயகத்திலும் ஐரோப்பாவிலும் வாழும் ரஷ்ய மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா முழுஅளவிலான படையெடுப்பைத் தொடங்கிய சில வாரங்களிலேயே சர்வதேச அரங்கில் ரஷ்யாவின் அந்தஸ்து சரிந்தது. ரஷ்ய வங்கிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகள் திணிக்கப்பட்டன. மேற்கத்திய நிறுவனங்கள் பெருமளவில் ரஷ்யாவில் இருந்து வெளியேறின.
ரஷ்யாவின் பெருநகரங்களில் இருந்த சூப்பர் மார்க்கெட்டுகளில் ஐரோப்பிய நாடுகளின் பொருட்கள் திடீரென மறைந்தன. ஐரோப்பிய நாடுகளுக்கான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. விசாக்களைப் பெறுவது மிகவும் கடினமானது. ரஷ்ய விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் மற்றும் அறிஞர்கள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டனர். ஐரோப்பாவில் வசிக்கும் ரஷ்யர்களுக்கு, வேலைக்கான விண்ணப்பங்களில் அவர்களின் தேசியம் குறித்த கேள்விகள் மற்றும் எதிர்மறையான ஊடகச் செய்திகள் பெரும் சுமையாக மாறின.
ரஷ்ய மக்கள் சந்திக்கும் துன்பங்கள்
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள், புதின் அரசைக் குறிவைத்து அறிவிக்கப்பட்டாலும், அதன் நேரடித்தாக்குதலுக்கு ஆளானவர்கள் சாமானிய மக்களே.
வாங்கும் திறன் பாதிப்பு மற்றும் பணவீக்கம்:
ஆப்பிள், ஐகேஇஏ, மெக்டோனல்ட் மற்றும் விசா, மாஸ்டர்கார்டு போன்ற சேவைகள் வெளியேறியதால் அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்தது.
வேலையிழப்பு:
பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேறி, அவை மூடப்பட்டதால் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒரே இரவில் வேலைகளை இழந்தனர்.
சர்வதேசத் தனிமைப்படுத்தல்:
ஸ்விப்ட் (SWIFT) அமைப்பிலிருந்து வங்கிகள் நீக்கப்பட்டதால் வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுக்குப் பணம் அனுப்பவோ, பெறவோ முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் மருத்துவச் சிகிச்சைகளுக்கான வாய்ப்புகள் முடங்கின.
வெளிநாடுகளில் வாழும் ரஷ்யர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்:
வெளிநாடுகளில் வாழும் ரஷ்யர்கள் தங்களின் சொந்த நாட்டு அரசாங்கத்தின் செயல்களுக்காக அங்கு கடும் இன்னல்களைச் சந்தித்தனர். பிரிட்டனைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர்கள் டெய்லர் மற்றும் டாம் ஸ்லேடர் கூறுகையில், “ஆய்வில் பங்கேற்றவர்கள் ரஷ்யாவை ‘ஒரு பெரிய விளையாட்டில் வெறும் பகடைக்காய்’ என்றும், ‘அணு ஆயுதக் கோலை ஏந்திய அடாவடிக்காரர்’ என்றும் விவரித்துள்ளனர். விளாடிமிர் புதினின் ஆட்சியையும் போரையும் ஆதரித்தவர்கள் கூட, உலக அரங்கில் ரஷ்யாவின் நிலை கணிசமாகச் சரிந்துவிட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர்” எனத் தெரிவித்தனர்.
சமூகப் புறக்கணிப்பு மற்றும் பாரபட்சம்:
ஐரோப்பாவில் வசிக்கும் ரஷ்யர்கள் ‘ரஷ்யர்’ என்ற அடையாளத்தினால் பாரபட்சமான பார்வைகளுக்கு ஆளாகினர். பல மாணவர்களும் தொழிலாளர்களும் தாங்கள் ரஷ்யர்கள் என்று வெளிப்படையாகச் சொல்லத் தயங்கினர். சில இடங்களில் உணவகங்கள் மற்றும் விடுதிகளில் சேவைகளும் மறுக்கப்பட்டன.
வங்கி மற்றும் விசா கட்டுப்பாடுகள்:
வங்கிக் கணக்குகள் காரணம் இன்றி முடக்கப்பட்டன. விசா புதுப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டு பலர் வசிப்பிடத்தை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டனர்.
குற்ற உணர்ச்சிக்குள்ளாகும் ரஷ்யர்கள்:
உக்ரைன் மீதான போராலும், அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களாலும் ரஷ்ய மக்கள் வரலாற்றில் எந்தக் காலமும் இல்லாத அளவுக்கு ஒருவித சமூகக் குற்ற உணர்ச்சிக்குள் தள்ளப்பட்டனர்.
தார்மிகப் பொறுப்பு:
உக்ரைனில் நடக்கும் அழிவுகளுக்குத் தாங்கள் நேரடியாக வாக்களிக்கவில்லை என்றாலும், புதின் செய்யும் செயல்களுக்குத் தாங்களும் தார்மிக ரீதியாகப் பொறுப்பாக்கப்படுவதாக உணர்ந்து மக்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.
தற்காப்புநிலை மற்றும் பயம்:
“நான் போரை எதிர்க்கிறேன்” என்று ஒவ்வொரு முறையும் தங்களை நிரூபித்துக் கொள்ள வேண்டிய அவல நிலை ரஷ்யர்களுக்கு ஏற்பட்டது. போர் எப்போது முடியும் என்ற நிச்சயமற்ற தன்மையும், குடும்பங்களுக்குள் உண்டான கருத்து வேறுபாடுகளும் மக்களை மன உளைச்சலுக்கு ஆக்கியுள்ளன.
இறுதியாக...
அதிபர் புதினின் அரசியல் அபிலாஷைகளுக்காகவும் நில உரிமைப் போருக்காகவும் சாதாரண ரஷ்ய மக்கள் கொடுத்த விலை மிக அதிகம். தாயகத்தில் பொருளாதார நெருக்கடிகளையும் வெளிநாடுகளில் ‘பூகோள அரசியல் கறையையும்’ அவர்கள் சுமந்து நிற்கிறார்கள். இவர்களின் துயரம், நவீன உலகில் ஒரு நாட்டின் அரசியல் முடிவுகள் அப்பாவி மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வளவு கொடூரமாகப் பாதிக்கிறது என்பதற்கான சாட்சியாக உள்ளது.
உறுதுணைக் கட்டுரை: தி கான்வர்சேஷன்