

வாஷிங்டன்: வெனிசுலாவின் புதிய அதிபர் டெல்சி ராட்ரிக்ஸ் அமெரிக்காவின் அறிவுரைகளை ஏற்று செயல்படாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 3-ம் தேதி வெனிசுலா தலைநகர் கராகஸில் தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம், அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸை கைது செய்தது.
இருவரும் அமெரிக்காவின் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து வெனிசுலா துணை அதிபர் டெல்சி ராட்ரிக்ஸ், அந்த நாட்டின் செயல் அதிபராக பதவியேற்று நாட்டை வழிநடத்தி வருகிறார்.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஊடகங்களில் கூறியிருப்பதாவது: வெனிசுலா மக்களின் நலன்களில் அமெரிக்கா மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது. அந்த நாட்டு மக்களின் நலன்களுக்கு தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளும்.
எங்களது அறிவுரைகளை டெல்சி ராட்ரிக்ஸ் ஏற்று செயல்பட வேண்டும். இல்லையென்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். நிக்கோலஸ் மதுரோவுக்கு ஏற்பட்ட நிலையைவிட மோசமான நிலை அவருக்கு ஏற்படும்.
அமெரிக்காவுக்கு இணக்கமாக டெல்சி செயல்பட்டால், வெனிசுலாவில் அமெரிக்க ராணுவத்தை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. ஒருவேளை அவர் எதிர்மறையாக செயல்பட்டால் அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறும்போது, “வெனிசுலா மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையை ஆக்கிரமிப்பாகக் கருதக்கூடாது. நாங்கள் வெனிசுலாவை ஆக்கிரமிக்கவில்லை” என்றார். அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் வெனிசுலா நலன் கருதி பிப்ரவரி 3-ம் தேதி வரை இலவச இணைய சேவை வழங்குகிறது.