

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிய நிலையில், “எங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானின் அனைத்து எரிசக்தி நிலையங்கள், அனைத்து பாலங்களும் தகர்க்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “கடந்த சனிக்கிழமை ஹார்முஸ் ஜலசந்தியில் பிரான்ஸ், பிரிட்டனை சேர்ந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. இது போர் நிறுத்த ஒப்பந்த மீறல் ஆகும். அமைதிப் பேச்சுவார்த்தைக்காக எனது பிரதிநிதிகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டு உள்ளனர். அவர்கள் திங்கள்கிழமை அங்கு சென்றடைவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
முந்தைய பதிவில், “ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருக்கிறது. இந்த ஜலசந்தியின் இருமுனைகளின் கப்பல் போக்குவரத்தை அமெரிக்க போர்க் கப்பல்கள் முடக்கி உள்ளன. ஹார்முஸ் ஜலதந்தியை மூடியிருப்பதன் மூலம் ஈரானுக்கு நாள்தோறும் 500 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. இதில் அமெரிக்காவுக்கு எந்த இழப்பும் இல்லை.
கச்சா எண்ணெய், எரிவாயு தேவைக்காக ஏராளமான சரக்கு கப்பல்கள் அமெரிக்காவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஈரானுக்கு நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறோம். நேர்மையான, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒப்பந்தத்தை முன்வைத்திருக்கிறோம்.
இதை பயன்படுத்தி அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வது ஈரானுக்கு நல்லது. இல்லையெனில் ஈரானின் அனைத்து எரிசக்தி நிலையங்கள், அனைத்து பாலங்களையும் தகர்ப்போம். இனிமேலும் பொறுமை காக்க முடியாது. ஈரானின் கொலை இயந்திரத்துக்கு நிரந்தர முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. இது இறுதி எச்சரிக்கை” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதனிடையே, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறும்போது, “நாங்கள் எந்த நாட்டின் மீதும் தாக்குதல் தொடுக்கவில்லை. எங்கள் நாட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. எங்களை தற்காத்து கொள்ளவே பதில் தாக்குதல்களை நடத்தினோம். ஈரானுக்கு அணுசக்தி உரிமை இருக்கக்கூடாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். இது எங்களின் உரிமை” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இந்த போர் நிறுத்தம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இதனிடையே கடந்த 11, 12-ம் தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்தின. சுமார் 21 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து இருதரப்பு இடையே இஸ்லாமாபாத்தில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.