

டொனால்டு ட்ரம்ப்
வாஷிங்டன்: ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகப் போரைத் தீவிரப்படுத்தும் வகையில், பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின், ஷாம்பெயின்உள்ளிட்ட மதுபானங்களுக்கு 200 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் ஏற்படும் மோதல்களுக்கு தீர்வு காணும் முயற்சியாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘போர்டு ஆப் பீஸ்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்.
ஐ.நா. சபைக்கு போட்டியாக அவர் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பில் சேர இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இந்த அமைப்பில் சேர பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதையடுத்தே, பிரான்ஸ் அரசை மிரட்டி பணியவைக்கும் வகையில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “அமெரிக்காவைச் சுரண்டுவதற்காகவே ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. எங்களது நாட்டின் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட வரியை அவர்கள் உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் மதுபானங்களுக்கு 200 சதவீத வரி விதிக்கப்படும். இது அமெரிக்க மதுபானத் தொழிலுக்குப் பெரும் நன்மையாக அமையும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகளவில் மதுபான உற்பத்தியில் முன்னிலையில் உள்ள பிரான்ஸ் நாட்டிற்கு, அமெரிக்கா மிக முக்கிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. ட்ரம்பின் இந்த அறிவிப்பால் பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரம், குறிப்பாகத் திராட்சை விவசாயிகள் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும் என்று அஞ்சப்படுகிறது.