

வாஷிங்டன்: கிரீன்லாந்து, கனடா, வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்காவின் பகுதிகளைப் போல போல காட்டும் புதிய வரைபடம் ஒன்றை அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். அந்த நிகழ்வுப் புகைப்படத்தில் ஐரோப்பிய தலைவர்களும் இருப்பது போன்று வடிவமைத்துள்ளார். புதிய சர்ச்சைக்கு இது வழிவகுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில், அவரை அவரது அலுவலகத்தில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பது போன்றும், அவர்களிடம் ட்ரம்ப் உரையாடுவது போன்றும் உள்ளது. ட்ரம்ப்பின் இடது பக்கத்தில் உள்ள வரைபடத்தில் கிரீன்லாந்து, கனடா, வெனிசுலா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் பகுதிகள் போல காட்டப்பட்டுள்ளன.
உக்ரைன் போர் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கடந்த ஆண்டு டொனால்டு ட்ரம்ப்பை சந்தித்துப் பேசினர். அப்போது எடுக்கப்பட்ட படத்தில் மாற்றங்களைச் செய்து ட்ரம்ப் தற்போது வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த புகைப்படத்தில், அதிபர் ட்ரம்ப் உடன் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜெர்மனி அதிபர் ஃபிரட்ரிக் மெர்ஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியோ மெலோனி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் உள்ளனர்.
டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ள மற்றொரு படத்தில், டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோருடன் கிரீன்லாந்தில் அமெரிக்கக் கொடியை நடுவது போன்று உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 14-ம் தேதி தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து தேவை. நாங்கள் கட்டியெழுப்பும் கோல்டன் டோம் திட்டத்துக்கு இது மிகவும் முக்கியமானது. கிரீன்லாந்தை அமெரிக்கா பெறுவதற்கு நேட்டோவே முன்னின்று வழிநடத்த வேண்டும். நாம் அதைச் செய்யாவிட்டால், சீனாவோ அல்லது ரஷ்யாவோ அதைச் செய்துவிடும். அது நடக்கவே விடக்கூடாது.
அமெரிக்காவின் கைகளில் கிரீன்லாந்து இருக்கும்போது நேட்டோ மிகவும் வலிமையானதாகவும் பயனுள்ளதாகவும் மாறும். கிரீன்லாந்து கிடைப்பதைவிட குறைவான ஒப்பந்தம் எதையும் அமெரிக்கா ஏற்காது’’ என தெரிவித்திருந்தார்.
எனினும், டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, யுனைடெட் கிங்டம், நெதர்லாந்து, பின்லாந்து ஆகிய நாடுகள் அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து, டிரம்ப் கடந்த 17-ம் தேதி வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், "கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எட்டு ஐரோப்பிய நாடுகளின் பொருட்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் கூடுதலாக 10% இறக்குமதி வரி விதிப்பேன். ஜூன் 1 முதல் இந்த வரி விகிதம் 25% ஆக உயரும்” என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.