“கிரீன்லாந்தை பெறும் அமெரிக்காவின் முயற்சியை ஐரோப்பா அதிகம் எதிர்க்காது” - ட்ரம்ப்

“கிரீன்லாந்தை பெறும் அமெரிக்காவின் முயற்சியை ஐரோப்பா அதிகம் எதிர்க்காது” - ட்ரம்ப்
Updated on
2 min read

வாஷிங்டன்: கிரீன்லாந்தைப் பெறும் அமெரிக்காவின் முயற்சியை ஐரோப்பியத் தலைவர்கள் அதிகம் எதிர்க்க மாட்டார்கள் என்று டொனால்டு ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டென்மார்க்கின் தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை, அமெரிக்காவின் ஒரு பகுதியாக இணைக்க டொனால்டு ட்ரம்ப் முயன்று வருகிறார். அமெரிக்காவின் பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து, தங்களுக்கு வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார். இந்த விவகாரத்தில் சமரசத்துக்கு இடம் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், கிரீன்லாந்தை அமெரிக்காவுக்கு வழங்க டென்மார்க் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கிரீன்லாந்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் பணியில் அவை ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், ட்ரம்ப் கடந்த 17-ம் தேதி வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், "கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் 8 ஐரோப்பிய நாடுகளின் பொருட்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் கூடுதலாக 10% இறக்குமதி வரி விதிப்பேன். ஜூன் 1 முதல் இந்த வரி விகிதம் 25% ஆக உயரும்” என்று கூறி இருந்தார்.

ட்ரம்ப்பின் இந்த மிரட்டலுக்கு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் பதில் அளித்த ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ‘‘புவிசார் அரசியல் அதிர்ச்சிகள் ஐரோப்பாவுக்கு ஒரு வாய்ப்பாக அமையலாம்; அமைய வேண்டும். தற்போது ஏற்பட்டு வரும் இந்த மாபெரும் மாற்றம், ஐரோப்பாவுக்கு ஒரு புதிய சுதந்திரத்தை சாத்தியமாக்குகிறது. பாதுகாப்பில் இருந்து பொருளாதாரம் வரை, பாதுகாப்பில் இருந்து ஜனநாயகம் வரை தற்போது ஐரோப்பா வேகம் எடுக்கிறது.

ஆர்டிக் பாதுகாப்பை ஒற்றுமையால் மட்டுமே அடைய முடியும். அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் நீண்டகால கூட்டாளிகள். அவ்வாறு இருக்க, தற்போது டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ள கூடுதல் வரிகள் குறித்த அறிவிப்பு தவறு. ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் கடந்த ஜூலை மாதம் ஒரு வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டன. ஒப்பந்தம் என்றால் ஒப்பந்தம்தான். நண்பர்கள் கைகுலுக்கும்போது அதற்கு ஓர் அர்த்தம் இருக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

இந்த பின்னணியில், இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள டொனால்டு ட்ரம்ப், கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய தலைவர்கள் அதிகம் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். அதோடு, ஐரோப்பிய நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், கிரீன்லாந்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்துக்கு, அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று விரைவில் செல்ல உள்ளது. வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளை என்ற அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

இதனிடையே, அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கை மேலும் தூண்டும் வகையில், கிரீன்லாந்து, டென்மார்க்கின் இயற்கையான பகுதி அல்ல என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘கிரீன்லாந்து விவகாரத்தில் தலையிடும் ஆர்வம் ரஷ்யாவுக்கு இல்லை. அந்த தீவின் கட்டுப்பாட்டைப் பெற ரஷ்யாவுக்கு எந்த திட்டமும் இல்லை. இது அமெரிக்காவுக்கும் தெரியும். கொள்கையளவில், கிரீன்லாந்து டென்மார்க்கின் ஓர் இயல்பான பகுதி அல்ல. அது நார்வேயின் இயல்பான பகுதியாகவும் இருந்தது இல்லை. அது ஒரு காலனித்துவப் படையெடுப்பு. அங்குள்ள மக்கள் அதற்கு பழகி, வசதியாக உணர்கிறார்கள் என்பது வேறு விஷயம்’’ என தெரிவித்துள்ளார்.

ஐநாவுக்கு மாற்றாக டொனால்டு ட்ரம்ப் ஏற்படுத்தும் உலக அமைதி வாரியத்தில் உறுப்பினராக பல்வேறு நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘‘ஆமாம் அவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஏனெனில், அவரும் ஓர் உலகத் தலைவர்’’ என குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், தற்போது ஐரோப்பிய நாடுகளுடன் மோதல் போக்கை வளர்ப்பதும், ரஷ்யாவுடன் நட்பு பாராட்டுவதும் ட்ரம்ப்பின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

“கிரீன்லாந்தை பெறும் அமெரிக்காவின் முயற்சியை ஐரோப்பா அதிகம் எதிர்க்காது” - ட்ரம்ப்
‘‘இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு மிக்கது’’ - ஐரோப்பிய ஆணைய தலைவர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in