‘‘இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு மிக்கது’’ - ஐரோப்பிய ஆணைய தலைவர்
டாவோஸ்: 200 கோடி மக்களைக் கொண்ட ஒரு சந்தையை உருவாக்கும் என்பதால், இந்தியா உடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய உர்சுலா வான் டெர் லேயன், ‘‘இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பதற்கு இன்னும் சில பணிகள் உள்ளன. ஆனால், நாங்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் விளிம்பில் உள்ளோம். சிலர் இதை அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என்று அழைக்கிறார்கள். இது 200 கோடி மக்களைக் கொண்ட ஒரு சந்தையை உருவாக்கும். இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட கால் பங்குக்குச் சமம்.
இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகத்தைப் பல்வகைப்படுத்தும். உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்தும்’’ என தெரிவித்தார்.
இந்திய குடியரசு தினத்தை ஒட்டி, ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இந்தியாவுக்கு வர உள்ளனர். அப்போது, இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்திருந்த இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், ‘‘நாங்கள் இதுவரை ஏழு வளர்ந்த நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம். ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தம், அவற்றுக்கெல்லாம் தாய் போன்று இருக்கும். இது உலகின் மிகவும் சக்திவாய்ந்த இரண்டு பொருளாதாரங்களை உள்ளடக்கும். எங்களுக்கு மிகச் சிறந்த வளர்ச்சி வாய்ப்புகளை இது கொடுக்கும்’’ என தெரிவித்திருந்தார்.
கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவுடன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்பட்டுள்ள புவிசார் அழுத்தங்கள் குறித்து விவரித்த உர்சுலா வான் டெர் லேயன், ‘‘புவிசார் அரசியல் அதிர்ச்சிகள் ஐரோப்பாவுக்கு ஒரு வாய்ப்பாக அமையலாம்; அமைய வேண்டும். தற்போது ஏற்பட்டு வரும் இந்த மாபெரும் மாற்றம், ஐரோப்பாவுக்கு ஒரு புதிய சுதந்திரத்தை சாத்தியமாக்குகிறது. பாதுகாப்பில் இருந்து பொருளாதாரம் வரை, பாதுகாப்பில் இருந்து ஜனநாயகம் வரை தற்போது ஐரோப்பா வேகம் எடுக்கிறது.
ஆர்டிக் பாதுகாப்பை ஒற்றுமையால் மட்டுமே அடைய முடியும். அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் நீண்டகால கூட்டாளிகள். அவ்வாறு இருக்க, தற்போது டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ள கூடுதல் வரிகள் குறித்த அறிவிப்பு தவறு. ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் கடந்த ஜூலை மாதம் ஒரு வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டன. ஒப்பந்தம் என்றால் ஒப்பந்தம்தான். நண்பர்கள் கைகுலுக்கும்போது அதற்கு ஓர் அர்த்தம் இருக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.