வாஷிங்டன்: வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கியூபாவும் வீழ்ச்சி அடைய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், ‘‘வெனிசுலா தலைவர் நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கியூபா வீழ்ச்சியடைய தயாராக உள்ளது.
ஏனெனில், பாதுகாப்பு எண்ணெய்க்காக கியூபா இனி வெனிசுலாவை நம்பியிருக்க முடியாது. மதுரோ பதவி நீக்கப்பட்டிருப்பதாலும், நட்பு நாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் வெனிசுலாவின் திறன் சரிந்துள்ளதாலும் கியூபா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கியூபாவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எதையும் எடுக்கத் தேவையில்லை. அது தானாகவே வீழ்ந்துவிடும் என்று நினைக்கிறேன். அது வீழ்ச்சி அடைந்து கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. அது முழுமையாக வீழ்ச்சி அடையும்’’ என தெரிவித்தார்.
நிகோலஸ் மதுரோ அதிகாரத்தில் தொடர்வதற்கும், அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் கியூபா முக்கிய பங்கினை வகித்ததாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
‘‘மதுரோவை அதிகாரத்தில் வைத்திருக்க கியூப பாதுகாப்புப் படைகள் முக்கிய பங்கு வகித்தன. கியூப உளவாளிகள் இதற்கான பணிகளை திறம்பட நடத்தினர். மதுரோவுக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கியதும், அரசாங்கத்துக்குள் இருப்பவர்களின் விசுவாசத்தை கண்காணித்ததும் கியூபர்கள்தான்.
மதுரோவுக்கு வெனிசுலா மெய்க்காப்பாளர்கள் பாதுகாப்பை அளிக்கவில்லை. கியூப மெய்க்காப்பாளர்கள்தான் இருந்தனர்’’ என மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
வெனிசுலாவில் நடந்த அமெரிக்க நடவடிக்கையின்போது 32 கியூப ராணுவ மற்றும் காவல் துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதை கியூப அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
வெனிசுலாவின் கோரிக்கையின் பேரிலேயே இந்த அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டதாக கியூப அரசு ஊடகங்கள் தெரிவித்தன. மேலும், இரண்டு நாட்கள் தேசிய துக்க தினமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் கியூபர்கள் கொல்லப்பட்டதை டொனால்டு ட்ரம்ப்பும் உறுதிப்படுத்தினார். அதேநேரத்தில், அமெரிக்க தரப்பில் எந்த உயிரிழப்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
கொலம்பியாவும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகத் தெரிவித்த ட்ரம்ப், கொகைன் போதைப் பொருளைத் தயாரித்து அமெரிக்காவுக்கு விற்க விரும்பும் ஒரு மோசமான மனிதரால் அந்த நாடு ஆளப்படுவதாக விமர்சித்தார்.
அதோடு, இனி நீண்ட காலத்துக்கு அந்த நாடு இதைச் செய்ய முடியாது என்றும் ட்ரம்ப் கூறினார். போதைப் பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.