

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால், ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஈரானும் அமெரிக்க ராணுவ தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீது பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. சர்வதேச நாடுகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை ஏற்றம் கண்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரானுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை ட்ரம்ப் கொடுத்துள்ளார்.
“ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியை ஈரான் செய்தால், அவர்கள் இதுவரை எதிர்கொண்ட தாக்குதலை காட்டிலும் இருபது மடங்கு கூடுதலாக மிக கடுமையான தாக்குதலை அமெரிக்கா மேற்கொள்ளும்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலும், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள தீமையை அழிப்பதற்கான உலா இது என்று ஈரான் மீதான தாக்குதலை அவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் நெடுநாட்கள் தொடராது என்றும் குறிப்பிட்டார்.
போரின் முடிவை நாங்கள் தீர்மானிப்போம்: இந்த போரை அமெரிக்க படைகள் முடிவுக்கு கொண்டுவராது. இந்த பிராந்தியத்தின் எதிர்கால நிலை இப்போது எங்கள் ஆயுதப் படைகளின் கைகளில் உள்ளன. போரின் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம் என்று ஈரான் ராணுவத்தின் சக்திவாய்ந்த படைப்பிரிவாக இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது.