புளோரிடா: “ட்ரம்ப் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும்; மன்னிக்கவும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும்,” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வேண்டுமென்றே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற முதலீடுகளை ஈர்ப்பதற்கான உச்சி மாநாட்டில் உரை நிகழ்த்திய அதிபர் டொனால்டு ட்ரம்ப், “அவர்கள் (ஈரான்) ட்ரம்ப் ஜலசந்தியை திறக்க வேண்டும். அதாவது ஹார்முஸ். நான் தற்செயலாக இப்படி சொல்லிவிட்டதாக பொய் செய்தியாளர்கள் கூறுவார்கள். இப்போது பெரும்பாலும் நான் எந்த தவறுகளையும் செய்வதில்லை’’ என குறிப்பிட்டார். அவரது இந்த உரையை பார்வையாளர்கள் கைகளைத் தட்டி வரவேற்றனர்.
தொடர்ந்து பேசிய ட்ரம்ப், ‘‘அவர்கள் ஓர் ஒப்பந்தம் செய்ய கெஞ்சுகிறார்கள். ஒப்பந்தம் எதுவாக இருந்தாலும், ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது நிச்சயம் அதில் இடம்பெறும்’’ என குறிப்பிட்டார்.
மேலும், ‘‘அவர்கள் கடுமையாக தாக்கப்படுகிறார்கள். யாராக இருந்தாலும் பேச்சுவார்த்தைக்கு முன்வருவார்கள். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு இதை அவர்களே ஒப்புக்கொண்டார்கள். தங்கள் தவறை ஈடு செய்யும் விதமாக, நாங்கள் உங்களுக்கு 8 எண்ணெய் கப்பல்களை அனுப்பப் போகிறோம் என்று கூறினார்கள். அடுத்தநாளே ஈரானில் இருந்து 8 எண்ணெய் கப்பல்கள் வருவதை ஒரு தொலைக்காட்சியில் பார்த்தேன்.
பின்னர் அவர்கள், நாங்கள் கூடுதலாக இரண்டு எண்ணெய் கப்பல்களை அனுப்புகிறோம் என்றார்கள். இப்போது நம்மிடம் 10 கப்பல்கள் உள்ளன. நாங்கள் உண்மையில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை இப்போதுதான் மக்கள் உணர்ந்துள்ளனர். நாங்கள் இப்போது பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்களால் ஏதாவது செய்ய முடிந்தால் அது சிறப்பாக இருக்கும். ஆனால், அவர்கள் (ஈரான்) அதை (ஹார்முஸ் ஜலசந்தி) திறக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் தவறினால் அந்த நாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா முற்றிலுமாக அழிக்கும் என ட்ரம்ப் சில நாட்களுக்கு முன்பு எச்சரித்திருந்தார். பேச்சுவார்த்தை நடைபெறுவதை ஒட்டி, அந்த நாட்டுக்கு எதிரான தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக பின்னர் ட்ரம்ப் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக மேலும் 10 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அவர் கூறியுள்ளார். இதன்மூலம் ஏப். 6ம் தேதி வரை இந்த காலக்கெடு உள்ளது.