நெறியாளருடன் காரசார விவாதம்: தொலைக்காட்சி நேர்காணலில் இருந்து ட்ரம்ப் வெளிநடப்பு

நெறியாளருடன் காரசார விவாதம்: தொலைக்காட்சி நேர்காணலில் இருந்து ட்ரம்ப் வெளிநடப்பு
Updated on
1 min read

வாஷிங்டன்: தொலைக்காட்சி நேர்காணலில் நெறியாளர் உடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அதிலிருந்து வெளியேறினார். இது சர்வதேச அளவில் பேசு பொருளாகி உள்ளது.

அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுவது வழக்கமான ஒன்று. அவர்கள் ஊடாகவே உலகத்துடன் உரையாடுவார். இந்தச் சூழலில் அமெரிக்க தொலைக்காட்சி செய்தி நிறுவனமான என்பிசி நியூஸுக்கு அவர் நேர்காணல் அளித்தார். இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விக்கு ட்ரம்ப் பதில் அளித்தார்.

அப்போது ஈரான் - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை, முந்தைய ஆட்சியாளர்களின் திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு ட்ரம்ப் பதில் அளித்தார். தொடர்ந்து ட்ரம்ப் ஆட்சி நிர்வாகம் அறிவித்துள்ள Anti-Weaponisation நிதி குறித்து நெறியாளர் கிறிஸ்டன் வெல்கர் கேள்வி எழுப்பினர். அதற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனின் மோசமான ஆட்சி நிர்வாகம்தான் காரணம் என ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

மேலும், முந்தைய ஆட்சியாளர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இந்த நிதி இது என ட்ரம்ப் வாதிட்டார். அப்போது உங்களது குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என நெறியாளர் கிறிஸ்டன் வெல்கர் தெரிவித்தார். அதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாக ட்ரம்ப் கூறினார்.

மேலும், கலிபோர்னியா தேர்தலில் முறைகேடு நடப்பதாக அவர் குற்றச்சாட்டு வைத்தார். அந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வழக்கமான முறைப்படி நடப்பதாக நெறியாளர் கிறிஸ்டன் வெல்கர் தெரிவித்தார். அதை ட்ரம்ப் ஏற்காமல் நிராகரித்தார். இருவரும் தொடர்ச்சியாக அது குறித்துப் பேசினர்.

இறுதியில் செய்தி நிறுவனங்கள் சார்பு நிலை உடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்தார். அதன் பின்னர் தான் நேர்காணலை நிறைவு செய்து கொள்வதாக சொல்லி ட்ரம்ப் புறப்பட்டார். இந்த நேர்காணலுக்காக தான் நீண்ட தூரம் பயணித்து வந்திருப்பதாக கிறிஸ்டன் வெல்கர் தெரிவித்தார்.

“நான் உங்களுக்குப் போதுமான நேரம் கொடுத்துவிட்டேன். நீங்கள் உங்களது ஊடகச் செயல்பாடுகளை சரி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால், நேர்மையற்ற ஊடகங்களைப் பெற்ற நாடு சிறந்த நாடாகத் திகழ முடியாது. அது உங்களுக்குத் தெரியும்” என சொல்லி ட்ரம்ப் புறப்பட்டார்.

நெறியாளருடன் காரசார விவாதம்: தொலைக்காட்சி நேர்காணலில் இருந்து ட்ரம்ப் வெளிநடப்பு
மானவ் சுதர் அபாரம்: 152 ரன்களுக்கு சுருண்டு ஃபாலோ-ஆன் பெற்றது ஆப்கன் | முலான்பூர் டெஸ்ட்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in