அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
வாஷிங்டன் டி.சி. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்பட்ட 25% கூடுதல் வரியை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டதை அடுத்து, இது தொடர்பான கூட்டறிக்கையை வெள்ளை மாளிகை நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டது. ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக இது பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரி 25 சதவீதத்தை ரத்து செய்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான நிர்வாக உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். ‘‘ரஷ்யக் கூட்டமைப்பின் எண்ணெய்யை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்வதை நிறுத்த இந்தியா உறுதி அளித்துள்ளது’’ என்று அந்த நிர்வாக உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த வரி குறைப்பு இந்திய நேரப்படி இன்று காலை 12.01 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
மேலும், ‘‘இந்தியா, அமெரிக்க எரிசக்திப் பொருட்களை வாங்கும். அடுத்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்துக்கு இந்தியா சமீபத்தில் உறுதி அளித்துள்ளது’’ என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ‘‘அடுத்த 5 ஆண்டுகளில், 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க எரிசக்திப் பொருட்கள், விமானங்கள் மற்றும் பாகங்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள், தொழில்நுட்ப பொருட்கள், கோக்கிங் நிலக்கரி ஆகியவற்றை வாங்க இந்தியா உத்தேசித்துள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அமெரிக்கா 25% பரஸ்பர விதியை விதித்தது. இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட அதிபர் ட்ரம்ப், இந்த வரி 18% ஆக குறைக்கப்படும் என தெரிவித்திருந்தார். எனினும், இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.