

ஜப்பான் பிரதமர் சனே டகைச்சியுடன் ட்ரம்ப்
வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமையன்று ஜப்பான் பிரதமர் சனே டகைச்சியுடன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நகைச்சுவையுடன் ‘பேர்ல் ஹார்பர் தாக்குதல்’ சம்பவத்தை சுட்டிக்காட்டியது அவரை சங்கடத்துக்கு உள்ளாக்கியது.
வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் சனே டகைச்சி இடையே நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான எரிசக்தித் திட்டங்களையும், முக்கிய கனிமங்களுக்கான செயல் திட்டத்தையும் அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ட்ரம்ப் டகைச்சியின் ஆங்கிலப் புலமையைப் பாராட்டியும், மொழிபெயர்ப்பைத் தவிர்ப்பது குறித்தும் நகைச்சுவையாகப் பேசினார். அவர், “நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா?” மிகவும் நல்லது. உங்களுக்கு மொழிபெயர்ப்பு வேண்டியதில்லை என்பது மிகவும் நன்றாக இருக்கிறது”, என்று கூறியது, பார்வையாளர்களிடையே ஒரு சங்கடமான புன்னகையை வரவழைத்தது.
மேலும், “அடுத்தமுறை உங்கள் மொழியில் நான் தேர்ச்சி பெற்றுவிடுவேன். டகைச்சியின் அடுத்த வருகைக்கு முன்பு ஜப்பானிய மொழியைக் கற்க முயற்சிப்பேன்” என்றும் விளையாட்டுத்தனமாகக் கூறினார் ட்ரம்ப். இந்த சந்திப்பில் ட்ரம்ப்பே அதிகம் பேசிய நிலையில், ஜப்பான் பிரதமர் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தார்.
இருப்பினும், ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு முன்பு நட்பு நாடுகளுக்கு ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது, ட்ரம்ப் ஜப்பானின் 1941 ‘பேர்ல் ஹார்பர்’ தாக்குதலைக் குறிப்பிட்டதால் பேச்சின் தொனி மாறியது.
ட்ரம்ப், “நாங்கள் யாருக்கும் அதைப் பற்றி சொல்லவில்லை, ஏனென்றால் நாங்கள் திடீர்த் தாக்குதலை விரும்பினோம். திடீர்த் தாக்குதல் பற்றி ஜப்பானை விட வேறு யாருக்கு நன்றாகத் தெரியும்?” என்று ட்ரம்ப் கூறினார். பின்னர் அவர் டகைச்சி பக்கம் திரும்பி, “நீங்கள் ஏன் பேர்ல் ஹார்பரைப் பற்றி எங்களிடம் சொல்லவில்லை?” என்று வினவினார்.
இந்தக் கருத்து ஜப்பானியப் பிரதமரைத் திடுக்கிடச் செய்தது போல் தோன்றியது. இதுகுறித்து டகைச்சி பதிலளிக்கவில்லை. அறையில் இருந்த செய்தியாளர்கள் இதற்கு சத்தமாக எதிர்வினையாற்றியபோதும், டகைச்சி தனது இருக்கையில் நெளிந்து, சங்கடத்துடன் இருப்பதை வெளிப்படுத்தினார்.
பேர்ல் ஹார்பர் தாக்குதல்: டிசம்பர் 7, 1941 அன்று, பேர்ல் ஹார்பரில் உள்ள கடற்படைத் தளத்தில் அமெரிக்கக் கடற்படையின் பசிபிக் கடற்படை மீது ஜப்பான் நடத்திய திடீர்த் தாக்குதலில் 2,400-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டுகளை வீசியது. வரலாற்றிலேயே அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட ஒரே நிகழ்வு இதுவேயாகும். இதனையடுத்து ஜப்பான் சரணடைந்ததால், இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.