

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை கைவிட பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் ஈரானின் தீவிரவாத ஆட்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. இதில் எங்களது நோக்கங்கள் நிறைவேறி வருகின்றன. எனவே ராணுவ நடவடிக்கையை கைவிடுவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
ஈரானின் ஏவுகணை உற்பத்தி ஆலைகள், ஆயுத உற்பத்தி ஆலைகள், அந்த நாட்டின் கடற்படை, விமானப் படைகளை அழித்திருக்கிறோம். எங்களது தாக்குதல்களால் ஈரானால் இனிமேல் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவே முடியாது. ஈரானின் அச்சுறுத்தல்களை முழுமையாக அழித்துவிட்டால் ஹார்முஸ் ஜலசந்தியில் தானாகவே தடையற்ற கப்பல் போக்குவரத்து தொடங்கிவிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர் சந்திப்பின்போது, ஈரானுடன் போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை. எங்களது நோக்கங்கள் முழுமையாக நிறைவேறிய பிறகே போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தெரிவித்தார். அடுத்த சில மணி நேரங்களில் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை கைவிடுவது குறித்து பரிசீலிப்பதாக சமூக வலைதளத்தில் அவர் கூறியுள்ளார். ட்ரம்பின் மாறுபட்ட கருத்துகளால் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.