

டொனால்ட் ட்ரம்ப்
வாஷிங்டன்: "இன்று இரவுடன் ஒரு நாகரிகமே அழிந்துவிடும், அது மீண்டும் ஒருபோதும் மீண்டு வராது" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல், உலக நாடுகள் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா அணு ஆயுதத் தாக்குதலை நடத்தத் திட்டமிடுகிறதா என்ற அச்சம் பரவி வரும் நிலையில் அதுகுறித்து வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நிபந்தனையை ஈரான் ஏற்க மறுத்த நிலையில், ட்ரம்ப் விதித்திருந்த 10 நாள் கெடு இன்றுடன் முடிவடைகிறது. இந்தக் கெடு முடிவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக, ஈரானின் பொருளாதார முதுகெலும்பாகக் கருதப்படும் கார்க் தீவு எண்ணெய் முனையம் மற்றும் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் அதிரடி வான்வழித் தாக்குதலை நடத்தின. இதில் ஈரானின் எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் ராணுவக் கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழியப் போகிறது. அது மீண்டும் ஒருபோதும் உயிர்பெறாது. இது நிகழ வேண்டும் என நான் விரும்பவில்லை. என்றாலும் அநேகமாக அதுதான் நடக்கும். 47 ஆண்டுகாலமாக நீடித்து வந்த மிரட்டிப் பறித்தல், ஊழல், கொலைகள் இறுதியாக ஒரு முடிவுக்கு வரும். ஈரானின் மகத்தான மக்களுக்கு இறைவன் அருள் புரிவானாக” என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் பதிவைத் தொடர்ந்து, ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், "ஈரான் தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால், அமெரிக்காவிடம் இருக்கும், இதுவரை பயன்படுத்தாத சில 'ஆயுதங்களை' அதிபர் பயன்படுத்தத் தயங்கமாட்டார்" என்று எச்சரித்தார்.
'இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்கள்' என்று அவர் குறிப்பிட்டது 1945-க்குப் பிறகு எங்கும் பயன்படுத்தப்படாத அணு ஆயுதங்களைத்தான் என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் வெடித்தன.
துணை அதிபரின் இந்தக் கருத்துக்கள் அணுவாயுதத் தாக்குதலைக் குறிப்பதாகத் தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை உடனடியாக ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. "துணை அதிபர் கூறியதில் அணு ஆயுதக் குறிப்புகள் எதுவுமில்லை; இதைச் சொல்பவர்கள் முழு முட்டாள்கள்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இருப்பினும், "ஒரே இரவில் ஈரானையே வரைபடத்திலிருந்து நீக்க முடியும்" என்ற ட்ரம்ப்பின் தொடர் பேச்சுகள், அவரது ஆலோசகர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ‘தி கார்டியன்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தலுக்குப் பதிலளித்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், "1.4 கோடிக்கும் அதிகமான ஈரானியர்கள் தாயகத்தைக் காக்கத் தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார். ஈரானிய மக்கள் முக்கிய மின் நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலி அமைத்துப் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்க ராணுவக் கட்டமைப்பின்படி, அணு ஆயுதத் தாக்குதலுக்கு உத்தரவிடும் இறுதி அதிகாரம் அதிபரிடம் மட்டுமே உள்ளது. இதற்காக அதிபர் எப்போதும் தனது ராணுவ உதவியாளர் வசம் இருக்கும் 'நியூக்ளியர் ஃபுட்பால்' எனப்படும் ரகசியக் குறியீடுகள் கொண்ட பெட்டியின் மூலம் உத்தரவைப் பிறப்பிக்க முடியும் என்று குறிப்பிடத்தக்கது.