கிம்மின் திடீர் சீன பயணம் பின்னணியில் உள்ள ராஜதந்திர கணக்கு என்ன?

கிம்மின் திடீர் சீன பயணம் பின்னணியில் உள்ள ராஜதந்திர கணக்கு என்ன?
Updated on: 
3 min read

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், ஒரு நாள் பயணமாக சீனாவின் டான்டாங் நகருக்கு கடந்த சனிக்கிழமை சென்றார். வட கொரியா, கிம் என்று பேசும்போது அடுத்தபடியாக ரகசியம் என்ற வார்த்தை இல்லாமல் இருக்க இயலாது. அதன்படி கிம்மின் இந்த சீனப் பயணமும் ஒரு திடீர் ரகசியப் பயணமாகவே நடந்ததால் அது ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதுவும் கிம் புல்லட் ப்ரூஃப் ரயிலில் சீனா சென்று வந்திருக்கிறார். இந்தச் சந்திப்புக்கு அழைப்பு விடுத்ததே சீன அதிபர் ஜி ஜின் பிங் தான் என்றும் கூறப்படுகிறது.

சீனாவுக்கு இது கிம்மின் 6-வது பயணம். 13 மாதங்களுக்குப் பிறகு முதல் முறை. சீன - வட கொரிய எல்லையில் வர்த்தகத்தை அதிகரிக்க புதிய பாலம் திறக்கப்பட்ட 9 நாட்களிலும், கொரியப் போரில் சீனா பங்கேற்றதன் நினைவு தினத்துக்கு முந்தைய நாளிலும் இந்தப் பயணத்தின் மற்றுமொரு கவனிக்கத்தக்க அம்சம்.

1950 - 1953 காலக்கட்டத்தில் நடந்த கொரியப் போரில் சீனா மிக முக்கியமான பங்கு வகித்தது என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். வட கொரியாவுக்கு ஆதரவாக சீனா நேரடியாகப் போரில் களமிறங்கியது. ஏனெனில், ஒருவேளை வட கொரியாவை அமெரிக்காவும் அதன் கூட்டாளிப் படைகளும் கைப்பற்றினால், அமெரிக்கப் படைகள் சீனா எல்லைக்கு மிக அருகில் வந்துவிடும். எனவே, தனது பாதுகாப்புக்கு ஒரு ‘அரண் நாடாக' வட கொரியா இருக்க வேண்டும் என்று சீனா அப்போதும், இப்போதும் விரும்புகிறது.

டான்டாங்... இது வட கொரியா எல்லையை ஒட்டிய சீன நகரம். இந்த எல்லை நகருக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மேற்கொண்ட பயணம், இரு நாடுகளுக்கும் உள்ள உறவின் இரண்டு முக்கிய அம்சங்களை முன்னிறுத்துகிறது.

1. கொரியப் போரில் இருந்து தொடரும் சீனாவுடனான வட கொரியாவின் நீண்டகால நட்பு.

2. சீனா - வடகொரியா தமது பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு.

அது மட்டுமல்லாது அடுத்த மாதம் ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டை நடத்த சீனா தயாராகி வரும் நிலையில், அந்த மாநாடு கிம்முக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பாக அமையுமா என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்தப் பயணம் நடந்துள்ளது.

இத்தகைய நிலையில், இந்தப் பயணத்தின் பின்னணியில் உள்ள ராஜதந்திர கணக்குகள் பற்றி சற்று சுருக்கமாகப் பார்க்கலாம்.

கிம் ஜாங் உன்னின் சீனப் பயணத்தின் பின்னணியில் பல்வேறு நோக்கங்கள் இருப்பதாகவே நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதில் மிக முக்கியமானதாக சீனாவுடனான அரசியல் மற்றும் ராணுவ உறவுகளை உறுதிப்படுத்துவது; பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது மற்றும் வட கொரியா - அமெரிக்க பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை ஏற்படுத்துவது இருப்பதாகக் கூறுகின்றனர்.

அதனால் தான் வட கொரிய அரசுப் பிரதிநிதிகளை அனுப்பாமல் கிம் நேரடியாகச் சென்றிருக்கிறார் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தென் கொரியாவின் க்யூங்நாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லிம் யூல் சூலின் இந்தப் பயணத்தின் மீது செலுத்தும் பார்வை மிக முக்கியமானது.

இது பற்றி அவர், “இந்தப் பயணம் கிம் பாணி ராஜதந்திரம். கொரியப் போர் உறவை நினைவுபடுத்தி சீனா உடனான தனது நீண்டகால நட்புக்கு கிம் புத்துயிர் பாய்ச்சி இருக்கிறார்.

<div class="paragraphs"><p>ட்ரம்ப் உடன் கிம்</p></div>

ட்ரம்ப் உடன் கிம்

கோப்புப் படம்

கட்டி முடிக்கப்பட்டும் 12 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த புதிய யாலு நதி பாலத்தின் அதிகாரப்பூர்வ திறப்பை நேரில் ஆதரித்ததன் மூலம், அந்தப் பாலம் வழியாக வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பையும் கிம் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தப் பாலம் அக்டோபர் 15 அன்று திறக்கப்பட்டது. இதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு செப்டம்பரில் வடகொரியாவும் ரஷ்யாவும் துமென் நதியின் குறுக்கே ஒரு சாலைப் பாலத்தைத் திறந்தன.

இது, கிம் சீனாவுடன் மட்டுமல்லாது ரஷ்யாவுடனும் தனது ராணுவப், பொருளாதார உறவை விரிவுபடுத்த முயல்வதைக் காட்டுகிறது.

சீனாவும், ரஷ்யாவும் தன் பின்னால் இருக்கும் ஒரு சிறந்த ராஜதந்திர நிலையை கிம் வலுப்படுத்தி இருக்கிறார்” என்றார்.

இதற்கிடையில், சீனாவில் போர் நினைவிடத்தைப் பார்வையிட்ட பின்னர் கிம் பேசியது என்ன என்ற விவரங்களும் வெளியாகியுள்ளன.

வட கொரியாவின் KCNA செய்தி ஊடகத் தகவலின்படி, “சோதனைகளை ஒன்றாகக் கடந்து வந்த பெருமைமிக்க வரலாற்றை என்றென்றும் நினைவில் கொள்வதற்கும் போற்றுவதற்கும், ரத்தத்தால் உருவான வடகொரியா - சீன நட்பை எல்லா காலத்திலும் உறுதியுடன் தொடர எங்கள் கட்சி, அரசு மற்றும் மக்களின் அசைக்க முடியாத உறுதியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கிம் பேசியுள்ளார்.

சீனாவும், வட கொரியாவும் இந்தப் பயணம் குறித்த தங்கள் அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் வடகொரியா - அமெரிக்க பேச்சுவார்த்தை பற்றி வெளிப்படையாக ஏதும் குறிப்பிடவில்லை. அதனால், ட்ரம்ப் - கிம் பேச்சுவார்த்தை நடப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்குமா என்பதில் நிபுணர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

திங்கள் முதல் வியாழன் வரை நடைபெற உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது மத்திய குழுவின் ஐந்தாவது கூட்டத்திற்கு முன்னதாக கிம் சீனாவுக்குச் சென்றதாலும், அதில் சீன வெளியுறவு அமைச்சர் கலந்து கொண்டதாலும் பீஜிங் உயர்மட்ட தலைமை இந்தப் பயணத்திற்கு கணிசமான முக்கியத்துவம் கொடுத்ததைக் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை இந்தப் பயணத்தில் கிம் ஏன் இத்தனை ஆர்வம் காட்டினார் என்று அலசினோம் அல்லவா? இப்போது இதில் சீனாவின் அக்கறை என்னவென்பதையும் காண்போம்.

வட கொரியா ஏவுகணைச் சோதனைகள், அணு ஆயுதச் சோதனைகளுக்கு அமெரிக்கா எப்பொழுதும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தாலும் கூட, சமீப காலமாக கிம்மின் போக்கில் அமெரிக்கா அதிகம் ஆத்திரமடைந்துள்ளது இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியது.

<div class="paragraphs"><p>வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் (இடது); சீன அதிபர் ஜி ஜின் பிங் (வலது) </p></div>

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் (இடது); சீன அதிபர் ஜி ஜின் பிங் (வலது)

கோப்புப் படம்

இந்தப் பின்னணியில் ட்ரம்ப் - கிம் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அந்த சந்திப்பு பற்றி சீனா கவலைப்படுகிறது. குறிப்பாக, இரு தரப்பில் ஏதேனும் ஒரு தரப்பு போரைத் தூண்டும் முடிவுகளை எடுக்கக்கூடும் என்று சீனா கவலைப்படுகிறது.

உதாரணமாக, ட்ரம்ப் - கிம் ஏதேனும் ஒப்பந்தம் செய்தாலும் கூட அதை கிம் நிச்சயமாக மீறுவார் என்பது சீனாவின் கவலைகளில் ஒன்று. கிம் அத்துமீறும் பட்சத்தில் ட்ரம்ப் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்து, ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும்.

அதனால், கிம் நல்லெண்ணத்துடன் பேசத் தயாராக இருக்கிறாரா என்பதையும் அறிய விரும்பிய சீனா அவரை வரவழைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல், வட கொரியாவின் பொருளாதாரக் கொள்கைகளில் சீனாவும் தலையிட விரும்புகிறது என்றும் புரிந்து கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

கிம் ஏன் சீனாவின் அழைப்பை ஏற்றுக் கொண்டார் என்பது குறித்தும் நிபுணர்கள் சில பார்வைகளை முன்வைக்கின்றனர்.

கிம் அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தைகளில் சிறிது செல்வாக்கைப் பெற சீனாவின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்திருக்கலாம். தனக்கு துணையாக சீனா இருக்க வேண்டும் என்பதற்காகவும், தன் தேசப் பாதுகாப்புக்கு வட கொரியா தொடர்ந்து அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் சீனாவும் - வடகொரியாவும் நெருக்கமாக ஒத்துழைக்க விரும்புவது போல் தெரிகிறது என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவே கிம்மின் திடீர் சீன பயணத்தின் பின்னணியில் மட்டுமல்ல, சீனாவின் அழைப்பிலும் ராஜதந்திர கணக்குகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதே நமக்குக் கிடைக்கும் புரிதல். சர்வதேச புவி அரசியலில் இது இருதரப்புக்கும் ஆதாயம் தரக்கூடிய வியூகமாகவே பார்க்கப்படுகிறது.

கிம்மின் திடீர் சீன பயணம் பின்னணியில் உள்ள ராஜதந்திர கணக்கு என்ன?
Raghu Thatha: அறிவுஜீவி முகமூடிகளை அம்பலமாக்கும் க.பா - திரை தேவதைகள் 41

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in