

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கும் டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானின் பகவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகத்தில் இரு அமைப்பின் தீவிரவாதிகளும் கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் குண்டு வீசப்பட்ட இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ராவல்கோட்டில் தீவிரவாத முகாம்கள் மீண்டும் கட்டப்பட்டு வருவதாகவும், இது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் குறிவைக்கப்பட்ட மற்றொரு இடம் என்றும் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி கார் குண்டுவெடிப்புக்கு பிறகு, புதிய தாக்குதலுக்கு மற்றொரு தற்கொலைப் படையை ஜெய்ஷ்-இ-முகமது தயார்படுத்தி வருவதாக கடந்த மாதம் செய்தி வெளியானது.
செங்கோட்டை குண்டுவெடிப்பு விசாரணையில் கிடைத்த தகவலின்படி, நிதி திரட்டுதல் டிஜிட்டல் வழியே நடைபெறுவதாகவும், அதில் ‘சடாபே’ என்ற பாகிஸ்தான் செயலியும் அடங்கும் என்றும் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்தன. செங்கோட்டை கார் குண்டுவெடிப்புக்கு சில நாட்களுக்கு முன், காஷ்மீரை குறிவைத்து நடைபெறும் சதித் திட்டமிடல் அபாய அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் லஷ்கர், ஜெய்ஷ் ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்த தாக்குதல் நடத்தலாம் எனவும் உளவுத் தகவல்கள் எச்சரித்தன.