

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று கூறியதாவது:
அமெரிக்காவை அழிப்போம் என்று கடந்த 47 ஆண்டுகளாக ஈரான் அரசு கூறி வருகிறது. ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காலத்தில் டெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகம் சிறைபிடிக்கப்பட்டது. அங்கு பணியாற்றிய அமெரிக்க தூதரக அலுவலர்கள் 444 நாட்கள் பிணையக் கைதிகளாக வைக்கப்பட்டனர்.
இதன்பிறகு 1983-ம் ஆண்டில் பெய்ரூட்டில் ஈரானின் பினாமி படைகள் மிகப்பெரிய தாக்குதலை நடத்தின. இதில் 241 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 2000-ம் ஆண்டில் இராக்கில் ஈரானிய படைகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஈரானின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேலில் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தியது. இதில் 46 அமெரிக்கர்கள் உட்பட 1,000 பேர் உயிரிழந்தனர். உலகின் தீவிரவாத மையமாக ஈரான் உருவெடுத்து உள்ளது. அண்மையில் ஈரான் அரசுக்கு எதிராக போராடிய ஆயிரக்கணக்கான மக்களை அந்த நாட்டு ராணுவம் கொன்று குவித்தது. அணு ஆயுத திட்டத்தை கைவிட அந்த நாடு மறுக்கிறது.
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஈரான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக நீடிக்கிறது. இந்த அச்சுறுத்தலை முறியடிக்கவே தற்போது அந்த நாடு மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நேரத்தில் ஈரான் ராணுவ வீரர்கள், குறிப்பாக அந்த நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை வீரர்களுக்கு ஓர் எச்சரிக்கையை விடுக்கிறேன். உங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரண் அடையுங்கள். இல்லையெனில் நீங்கள் நிச்சயமாக மரணத்தை சந்திக்க நேரிடும். ஈரானின் அனைத்து ஏவுகணைகளும் முழுமையாக அழிக்கப்படும்.
ஈரான் மக்களுக்கு ஓர் அழைப்பு விடுக்கிறேன். எங்கள் பணியை விரைவில் முடிப்போம். அதன்பிறகு அரசு நிர்வாகம் உங்கள் வசமாகும். இவ்வாறு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.