

இஸ்லாமாபாத்: உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 9 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக சிறை வளாகத்தில் அவரது சகோதரி சந்தித்தார்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் நிறுவனரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் (73), கடந்த 2018 முதல் 2022 வரை பிரதமராக பதவி வகித்தார். அவரது பதவிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் இம்ரானுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து 2023 முதல் அவர் ராவல்பிண்டியில் உள்ள ஆதியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதை அடுத்து, இம்ரானை 2 நாட்களில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அவரது குடும்பத்தினர் சந்திக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, இம்ரான் கானை அவரது சகோதரி நோரீன் நியாசி ஆதியாலா சிறை வளாகத்தில் உள்ள அறையில் 15 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். கடந்த 9 மாதங்களில் இருவரும் சந்திப்பது இதுதான் முதல் முறை. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் மனைவி புஸ்ரா பிபியுடன் இம்ரான் கான் சிறையில் உள்ள அறையில் சந்தித்துப் பேசினார்.
மறுஆய்வு மனு தாக்கல்
இதனிடையே, இம்ரான் கானை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான் அரசு நேற்று மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.