

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோரின் இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக திமுகவும் இடம் பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்த பின் திமுகவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொகுதி வரையறை மசோதாவை கடுமையாக எதிர்த்த திமுக, இப்போது அதற்கு ஆதரவளிக்க சில நிபந்தனைகளை விதித்தது. மேலும் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டார். மாநிலங்களவை எம்.பி.யான கனிமொழி சோமுவும், அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை என கூறியிருந்தார்.
இதையடுத்து சமூகவலைதளங்களிலும் திமுக-பாஜக நெருக்கம் பற்றிய செய்திகள் விமர்சனங்களுடன் வெளியாகி வருகின்றன. இதன் மீதான ஒரு கேள்விக்கு மக்களவை எம்.பி.யான கனிமொழி, பாஜகவுடன் எந்தக் கூட்டணியும் இல்லை என பதில் அளித்திருந்தார். எனினும், திமுக-பாஜக உறவு தொடர்பான பேச்சுக்கள் அடங்கியபாடில்லை.
தற்போது வட மாநில நாளேடுகளும் இதுகுறித்து செய்தி வெளியிடத் தொடங்கி விட்டன. குறிப்பாக, பிரதமர் மோடி பெரிய அளவில் மாற்றம் செய்யும் அமைச்சரவையில் திமுகவும் இடம்பெறப் போவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் திமுக எம்.பி.க்கள் வட்டாரம் கூறுகையில், ‘காங்கிரஸுடனான உறவு முறிந்ததால் திமுகவுக்கு ஒரு தேசியக் கட்சியின் நட்பு அவசியமாகிறது.
அப்போதுதான் தமிழ்நாட்டில் ஆளும் தவெகவை சமாளிக்க முடியும். இதனால், பாஜகவுடன் நட்பை ஏற்படுத்தும் முயற்சி ஒருபுறம் இருப்பினும், அதன் அமைச்சரவையில் இணைவோமா எனத் தெரியவில்லை. கட்சித் தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும்” என்றார்.
இதனிடையே, பிரதமர் மோடி, 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்களின் இலாகாக்களை மாற்ற விரும்புவதாகத் தெரிகிறது. சிலரின் பணிச்சுமையைக் குறைக்கவும், சிலருக்கு புதிய மற்றும் கூடுதல் பொறுப்புகள் வழங்கவும், சிலரை விடுவித்து மீண்டும் கட்சிப் பணிக்கு அனுப்பவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் திமுக தொடர்பான எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் உருவாகியுள்ளது.