இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் மக்களின் ‘உரிமை’ போராட்டத்துக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி வெளியிட்டுள்ள செய்தியில், “பாகிஸ்தானின் அணுகுமுறை தெளிவாக உள்ளது. எவ்வளவு தீவிரமான பிரச்சினையாக இருந்தாலும், அவை பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
நமது பாதுகாப்பு, நமது அண்டை நாடுகளின் மற்றும் பரந்த உலகின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பதற்றங்களைக் குறைக்கும், பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும், ஒத்துழைப்புக்கான சூழலை உருவாக்கும் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். “நம்மை நாமே சுய பரிசோதனை செய்து, பாகிஸ்தானின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்தின் பலன்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு சமூகத்துக்கும் சென்றடைவதை உறுதி செய்ய, நாம் நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்.
நமது இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கல்வி மற்றும் திறன்களை மேம்படுத்த வேண்டும். தொடர்ச்சியான சமூக, பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும்” என்று ஆசிப் அலி சர்தாரி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மக்களின் போராட்டத்துக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார். “இந்தியாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மக்களுடன் நாங்கள் எங்கள் ஒற்றுமையைப் புதுப்பித்துக்கொள்கிறோம்.
அவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்துக்கு எங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஜம்மு காஷ்மீர் பிரச்சினைக்கு அதன் மக்களின் விருப்பங்கள் மற்றும் ஐநா தீர்மானங்களுக்கு இணங்க ஒரு அமைதியான தீர்வை காண்பதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவளிக்கும்” என்று சர்தாரி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் மன்னராக இருந்த ஹரி சிங், ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதாக அறிவித்து, இந்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டார். இதற்கு எதிராக, பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரை கைப்பற்ற முயன்று, பல பகுதிகளை ஆக்கிரமித்தது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது. ஐநாவின் தலையீட்டால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதி நிலப்பகுதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், அந்த நாடு ஜம்மு காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளதாக தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சுதந்திர தின செய்தியில், இந்தியா விஷயத்தில் கடுமை காட்டியுள்ள பாகிஸ்தான் அதிபர், அதேநேரத்தில் மற்றொரு அண்டை நாடான ஆப்கானிஸ்தான் விஷயத்தில் மென்மையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். “வரலாற்று வேறுபாடுகள் இருந்தபோதிலும், நமது அண்டை நாடான ஆப்கானிஸ்தானின் தேசிய இறையாண்மையை நாம் எப்போதும் மதித்து ஆதரித்து வருகிறோம் என்பதையும், அதே பரஸ்பர ஆதரவை எதிர்பார்ப்பதையும் நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
ஆப்கானிஸ்தானின் தற்போதைய இடைக்கால ஆட்சி, பாகிஸ்தான் உட்பட அண்டை நாடுகளுக்கு எதிராக தாக்குதல்களைத் தொடுப்பதற்காகப் பல்வேறு பயங்கரவாதக் குழுக்கள் தங்கள் மண்ணைப் பயன்படுத்த அனுமதித்து ஆதரிப்பது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.