“ராகுல் காந்தி செயல்படும் விதத்தை இளைஞர்கள் ஏற்க மாட்டார்கள்” - நிதின் நபின்

“ராகுல் காந்தி செயல்படும் விதத்தை இளைஞர்கள் ஏற்க மாட்டார்கள்” - நிதின் நபின்
Updated on
2 min read

புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செயல்படும் விதத்தை இளைஞர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நான் நம்புகிறேன் என்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையால் நிகழ்ந்த துயரங்களை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 14-ம் நாள், பிரிவினை துயரத்தின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு டெல்லி அருகே குருகிராமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், “எந்த தவறும் செய்யாத நிலையிலும் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களையும், அதன் நினைவுகளையும் போற்றி நினைவுகூறும் நாள் இது.

1940ல் லாகூர் தீர்மானம் இரு தேசக் கோட்பாட்டை பற்றி விவாதித்த அதே காலகட்டத்தில், நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கும்போது அதற்கான விலையை பிரிவினை வடிவில் நாம் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை நாட்டு மக்கள் உணரத் தொடங்கினர்.

இதை நான் இன்று குறிப்பிடக் காரணம், தங்களுக்கான அதிகாரத்தையும் பொன்னான எதிர்காலத்தையும் கனவு கண்டவர்கள் அதிகாரத்தை அடைந்தார்கள். ஆனால், சுதந்திரக் கனவு கண்டவர்களோ, ரத்த ஹோலியை எதிர்கொண்டார்கள். பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழக்க வேண்டியிருந்தது. அந்த வலி இன்று நம் அனைவரின் இதயங்களிலும் குடிகொண்டுள்ளது.

இந்த வலியைத் தாங்கிய, இந்த துயரத்தைக் கண்ணால் கண்ட குடும்பங்களின் நினைவுகளைச் சற்று நினைத்துப் பார்த்தால், அத்தகையதொரு கடினமான தருணத்தை ஒருவேளை நாம் யாரும் நது வாழ்வில் அனுபவித்திருக்க மாட்டோம் என்பதை உணருவோம்.

நாட்டின் பிரிவினையில் தங்களுக்கான வாய்ப்பையும் எதிர்காலத்தையும் கண்டவர்கள், அந்த அதிகார மாற்றத்தை முன்னெடுத்தவர்களே. கோடிக்கணக்கான இந்தியர்களின் எதிர்காலத்தை வைத்து விளையாடிய அவர்கள், தங்கள் சொந்த எதிர்காலத்தை உறுதிப்படுத்திக்கொண்டனர்.

1946 ஆகஸ்ட் 16-ம் தேதி நேரடி நடவடிக்கை நாள் அன்று, கொல்கத்தாவின் வீதிகள் ரத்தக்களரியாகின. அது ஒட்டுமொத்த நாட்டையும் மதக்கலவரத்தில் ஆழ்த்தியது.

நேரு குடும்பத்தினர் அதிகாரத்துக்காகவே நாட்டை பிளவுபடுத்தினர். அவர்கள் அப்போது நாட்டை பிளவுபடுத்தினார்கள்; இப்போது சமூகத்தை பிளவுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

நான் காங்கிரஸிடம் கேட்க விரும்புகிறேன், பிரிவினையின் வலியை சுமந்த அந்த குடும்பங்களிடம் நீங்கள் எப்போதாவது பகிரங்க மன்னிப்பு கோரியிருக்கிறீர்களா? நீங்கள் அதை ஒருபோதும் செய்யவில்லை. ஏனெனில், அப்படிச் செய்தால் உங்கள் உண்மை முகம் வெளிப்பட்டுவிடும் என்று உங்களுக்குத் தெரியும்.

அந்த காலகட்டத்தில் வாழ்நாள் முழுவதும் சேர்த்த சொத்துகளை விட்டுவிட்டு லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்ந்தனர். அவர்கள் இடம்பெயர்ந்தபோது, இரவு எங்கே தங்குவது, எங்கே, எப்படி வாழ்வது, எங்கே வேலை தேடுவது என்று எந்த தெளிவும் அவர்களுக்கு இருக்கவில்லை.

அந்த நாளை நினைக்கும்போது எனக்கு மிகுந்த வேதனை ஏற்படுகிறது. கொல்கத்தாவில் மகாத்மா காந்தி அமைதிப் பேரணி நடத்தினார். ராவல்பிண்டி முதல் பஞ்சாபின் பல பகுதிகள் வரை மக்கள் வன்முறையை எதிர்கொண்டனர்.

இன்றைய இளம் தலைமுறையினர் இந்திய பிரவினையின் துயரத்தை அறிந்துகொள்ள வேண்டும். ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்தார்கள்; லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்தனர்.

பிரிவினையின் துயரத்தை நினைவு நாளாக அனுசரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்தபோது, அந்த இருண்ட அத்தியாயத்தை நினைவில் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார். ஏனெனில், தங்கள் வரலாற்றை அறியாத, புரிந்துகொள்ளாத, அதில் பெருமை கொள்ளாத எந்தவொரு தேசத்தாலும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை கட்டமைக்க முடியாது.

நேரு - காந்தி குடும்பத்தினர், தங்கள் கட்சியை அதிகாரத்துக்காக மட்டுமே கட்டமைத்தனர். அதிகாரத்துக்காகவே இந்த நாட்டை பிரித்தனர். இன்றும்கூட அவர்களின் மனநிலை மாறவில்லை. அவர்களின் செயல்பாட்டு முறைகளிலோ, கொள்கைகளிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

எதிர்க்கட்சித் தலைவரின் செயல்பாடுகளை இளைஞர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நான் கருதுகிறேன். இந்தியாவின் ராஜதந்திரம் எவ்வாறு அங்கீகரிக்கப்படுகிறது என்பதையும், இந்தியா உலகளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதையும் உலகம் உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது.

மக்கள் நமது வளர்ச்சியைம் முன்னேற்றத்தையும் அங்கீகரித்து வருகின்றனர். சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நானும் கலந்து கொண்டேன். அங்கு எதிர்க்கட்சியை வழிநடத்திய காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படுத்திய நடத்தையை பார்த்தேன். இந்திய பிரிவினையின் கொடூரங்களையும் வலியையும் இந்த நாட்டின் மீது திணித்த அதே நபர்கள், இன்று இந்தியாவை ஒன்றிணைப்பது பற்றி பேசுகிறார்கள்.

இந்தியாவை துண்டு துண்டாக உடைக்க வேண்டும் என்று முழக்கமிடுபவர்களை வரவேற்பவர்களும் இவர்களே. நாட்டை ஒன்றிணைத்து முன்னோக்கி அழைத்துச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் இவர்களுக்கு ஒருபோதும் இருக்க முடியாது” என்று அவர் பேசினார்.

“ராகுல் காந்தி செயல்படும் விதத்தை இளைஞர்கள் ஏற்க மாட்டார்கள்” - நிதின் நபின்
சாவர்க்கர் மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in