

கொழும்பு: டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அத்தியாவசிய மற்றும் மனிதாபிமான உதவிகளை அளிக்க ‘ஆபரேஷன் சாகர் பந்து' நடவடிக்கையை இந்தியா தொடங்கியது.
இத்திட்டத்தின் கீழ் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் உதயகிரி கப்பல்கள் மூலம் 6.5 டன் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து இந்திய விமானப் படை மூலம் 12 டன் பொருட்கள் கொழும்பு நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் விமானப் படை வீரர்களை இலங்கைக்கு இந்தியா அனுப்பியது. இவர்கள் இலங்கையில் பல உயிர்களை காப்பாற்றினர்.
சரியான நேரத்தில் உதவிய இந்தியாவுக்கு இலங்கை மக்கள் சமூக வலைதளங்களில் நன்றி தெரிவித்துள்ளனர். இதில் கொழும்பு நகரில் வசிக்கும் ஒருவர் ரெடிட் வலைதளத்தில், ‘‘இலங்கைக்கு பொருட்கள் மட்டுமின்றி மீட்புப் பணிகளுக்கு ஹெலிகாப்டர்களும் வழங்கிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க ஒரு வினாடி எடுத்துக்கொள்ள விரும்பினேன். புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் கடவுளின் பணியை இந்திய வீரர்கள் செய்தனர். நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், “புவியியல் ரீதியாக இந்தியாவுக்கு இலங்கை ஒரு முக்கிய நாடு. தனக்கு ஆதரவாக இருந்தாலும் சரி, எதிராக இருந்தாலும் சரி மனிதாபிமான உதவி தேவைப்படும் நாடுகளுக்கு உதவிட இந்தியா எப்போதும் தயாராக உள்ளது’’ என்று பாராட்டி உள்ளார்.