

மோனி சக்கரவர்த்தி
டாக்கா: வங்கதேசத்தின் பலாஷ் உபாசிலா பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த இந்து இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் மக்கள் தொகை சுமார் 18 கோடி ஆகும். இதில் 91% பேர் முஸ்லிம்கள். 8% பேர் இந்துக்கள். இதர மதங்களை சேர்ந்தவர்கள் ஒரு சதவீதம் பேர் உள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டில் வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தன. வரும் பிப்ரவரி 12-ம் தேதி வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சூழலில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி இன்கிலாப் மஞ்சா என்ற மாணவர் போராட்ட குழுவின் மூத்த தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் கடந்த டிசம்பர் 18-ம் தேதி உயிரிழந்தார். ஹாடி கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக வங்கதேச சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இதன் காரணமாக இந்துக்கள் மீதான தாக்குதல் தீவிரமடைந்திருக்கிறது.
கடந்த டிசம்பர் 18-ம் தேதி வங்கதேசத்தின் மைமன் சிங் பகுதியை சேர்ந்த தீபு சந்திர தாஸ் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டார். டிசம்பர் 24-ம் தேதி ராஜ்பாரி பகுதியை சேர்ந்த அம்ரித் மண்டல் அடித்துக் கொல்லப்பட்டார். டிசம்பர் 29-ம் தேதி வங்கதேச பாதுகாப்புப் படை வீரர் பிஜேந்திர பிஸ்வாஸ், சக வீரரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த 3-ம் தேதி ஷரியாத்பூரை சேர்ந்த தொழிலதிபர் ககோன் சந்திர தாஸ் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மாலை பி.டி.காபர் என்ற நாளிதழின் மூத்த ஆசிரியர் ராணா பிரதாப் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வங்கதேசத்தின் பலாஷ் உபாசிலா பகுதியில் மோனி சக்கரவர்த்தி (40) என்பவர் அங்குள்ள சந்தையில் மளிகை கடை நடத்தி வந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை மூடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த மோனி சக்கரவர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில், இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக அடிப்படைவாத கும்பல் அவரை கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து வங்க தேசத்தின் நர்சிங்டி பகுதியில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் அப் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் பங் கேற்றனர். அப்போது மோனி சக்கரவர்த்தியின் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.