

அதிமுக கூட்டணியில் பாமக
படம்: அன்புமணியின் ட்விட்டர் பக்கம்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இபிஎஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் பாமகவுடனான கூட்டணி குறித்தும் அதிமுக பரிசீலித்து வந்தது.
இந்நிலையில், இன்று காலை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்றார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாமக தலைவர் அன்புமணியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது இபிஎஸ் கூறியதாவது: ஏற்கெனவே அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இந்தக் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இது இயற்கையான கூட்டணி. இந்தக் கூட்டணி அதிமுக - பாமக கட்சியினர், தொண்டர்கள் விரும்பியவாறு அமைந்துள்ளது. இது வெற்றிக் கூட்டணி.
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில் ஒரு வலிமையான தமிழகத்தை உருவாக்க, மக்களுக்கு தேவையான திட்டத்தை கொடுக்கும் அரசு அமைய எங்களது கூட்டணி 234 தொகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
அதிமுக, பாஜக, பாமக ஆகிய 3 கட்சிகளும் இணைந்து இரவு, பகல் பார்க்காமல் சுறுசுறுப்பாக செயல்பட்டு, மிகப்பெரிய வெற்றிபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். தொகுதிகள் எண்ணிக்கை முடிவு செய்துவிட்டோம். மற்றவை பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
இருப்பினும், பாமகவுக்கு 20 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ்.
தொடர்ந்து அன்புமணி பேசியபோது, “வரும் சட்டப்பேரவை தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து சந்திக்கும் வகையில் இணைந்திருக்கிறோம். இது, எங்களுக்கு மகிழ்ச்சியான தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் நாங்கள் சேர்ந்து இருக்கிறோம். இது வலுவான கூட்டணி.
எங்களது நோக்கம் மக்கள் விரோத, ஊழல் செய்கிற, பெண்களுக்கு எதிரான, சமூக நீதிக்கு எதிரான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே. மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்த்து இருக்கிறோம்.
சமீபத்தில் 100 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டபோது கிராமப்புற மக்கள் திமுக மீது மிகுந்த கோபத்தில் இருப்பதை பார்த்தோம். தேர்தல் எப்போது வரும் என்று அவர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். உறுதியாக எங்களது கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்,