‘டிச.16 அன்று வங்கதேசம் செல்ல ஷேக் ஹசீனா திட்டம்’ - செய்தித் தொடர்பாளர் தகவல்

பயண ஏற்பாடு தொடர்பாக பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு கோரிக்கை
‘டிச.16 அன்று வங்கதேசம் செல்ல ஷேக் ஹசீனா திட்டம்’ - செய்தித் தொடர்பாளர் தகவல்
Updated on: 
1 min read

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டிசம்பர் 16 அன்று புதுடெல்லியில் இருந்து டாக்காவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டம் காரணமாக, 2024-ம் ஆண்டு அப்போதைய வங்கதேச பிரதமரும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். 2024, ஆகஸ்ட் 5 முதல் அவர் இந்தியாவில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகவும், அதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும் அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை அடுத்து, ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்துமாறு அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. வங்கதேச அரசின் இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக இந்திய அரசு தெரிவித்திருந்தது.

வரும் டிசம்பரில் தான் தாயகம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனாவும் தெரிவித்திருந்தார். நாடு திரும்பியதும் தனக்கு எதிரான வழக்கை எதிர்கொள்ளப் போவதாகவும், தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அதை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறி இருந்தார்.

இந்தப் பின்னணியில், ஷேக் ஹசீனா வரும் டிசம்பர் 16-ம் தேதி வங்கதேசம் திரும்ப உள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் சையத் மொசம்மல் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘2024, ஆகஸ்ட் 5 அன்று வங்கதேச அரசுக்குச் சொந்தமான விமானத்தில்தான் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

எனவே, தற்போதைய அரசு டெல்லியில் இருந்து அவர் டாக்கா திரும்புவதற்குத் தேவையான விமானப் பயண ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என்று பிரதமர் தாரிக் ரஹ்மானிடம் அவர் கோருகிறார்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள ஷேக் ஹசீனாவின் உதவியாளரான அபு ஒபைதா அரின், “ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்ப டிசம்பர் 16-ம் தேதியை முடிவு செய்திருக்கிறார். இது மிகவும் குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. தனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் தலைமையில் வங்கதேசம் பெற்ற வெற்றியை தனது மக்களுடன் இணைந்து கொண்டாட அவர் விரும்புகிறார்.

அவர் நிச்சயமாக நாடு திரும்புவார் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர் மீண்டும் வந்த பிறகு, அவரது தலைமையின் கீழ் வங்கதேசம் அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பு நோக்கி மீண்டும் முன்னேறும்.” என தெரிவித்துள்ளார்.

‘டிச.16 அன்று வங்கதேசம் செல்ல ஷேக் ஹசீனா திட்டம்’ - செய்தித் தொடர்பாளர் தகவல்
‘ஆவின் பாலகங்களின் வாடகை உயர்வை திரும்பப் பெறுக’ - அன்புமணி கோரிக்கை

X