

ரியாத்: சவுதி அரேபியா, ஏமனின் ஹவுதி கிளர்ச்சிப் படை இடையே போர் தீவிரமடைந்து வருகிறது. புனித மெக்கா நகரை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சிப் படை நேற்று நடத்திய ட்ரோன் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சிப் படை, பிஎல்சி, எஸ்டிசி ஆகிய 3 குழுக்கள் தனித்தனியாக ஆட்சி நடத்தி வருகின்றன. இந்த மூன்று குழுக்களும் பரஸ்பரம் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் ஹவுதி கிளர்ச்சிப் படைக்கு ஈரானும், பிஎல்சி-க்கு சவுதி அரேபியாவும், எஸ்டிசி-க்கு ஐக்கிய அரபு அமீரகமும் ஆதரவு அளித்து வருகின்றன.
கடந்த சில நாட்களாக சவுதி அரேபியா, ஹவுதி கிளர்ச்சிப் படை இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. ஹவுதி படையின் தலைநகரான சனா மற்றும் ஹோடைடா துறைமுகம் மீது சவுதி போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதற்குப் பதிலடியாக சவுதியின் ஜெட்டா, தயூப் நகரங்கள் மீது ஹவுதி படை ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
சவுதி அரேபியா எச்சரிக்கை: முஸ்லிம்களின் புனித நகரான மெக்கா வான் பரப்பில் நேற்று ஹவுதி படையின் ட்ரோன் நுழைந்தது. இந்த ட்ரோன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது. சவுதி அரேபிய ராணுவ செய்தித் தொடர்பாளர் துர்கி அல் மாலிகி கூறும்போது,“கடந்த 2017-ம் ஆண்டு புனித மெக்கா நகரை குறிவைத்து ஹவுதி தீவிரவாதிகள் ஏவுகணையை வீசினர். தற்போது அவர்கள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளனர்.
இந்த தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. புனித மெக்காவை குறிவைத்ததன் மூலம் சிவப்பு கோட்டை அவர்கள் தாண்டி உள்ளனர். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என்றார். ஹவுதி செய்தித்தொடர்பாளர் ஹசம் அல் அசாத் கூறும்போது, “புனித மெக்கா நகரம் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. சவுதி அரேபியா பொய் குற்றச்சாட்டை சுமத்துகிறது” என்றார். சவுதி அரேபிய ராணுவம் புனித மெக்கா நகரில் அபாய எச்சரிக்கை விடு்த்துள்ளது. வான்வழி தாக்குதல் அபாயம் நீடிப்பதால் பொது இடங்களில் ஒன்றுகூட வேண்டாம், மொட்டை மாடிகளில் யாரும் நிற்க வேண்டாம் என்று சவுதி ராணுவம் எச்சரித்துள்ளது.
ஹவுதி படையின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களில் சவுதி அரேபியாவின் பல எண்ணெய் கிணறுகள் தீப்பிடித்து எரிகின்றன. சவுதியின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி படை நேற்று அறிவித்தது. சவுதி அரேபியா மற்றும் அதன் ஆதரவு பெற்ற ஏமனின் பிஎல்சி படையின் தாக்குதல்களில் ஹவுதி படை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர்.
பாகிஸ்தான் உதவ மறுப்பு: சவுதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் கடந்த ஆகஸ்டில் மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி ஏதாவது ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் இதர நாடுகள் ராணுவ ரீதியாக உதவ வேண்டும். தற்போது ஹவுதி கிளர்ச்சிப் படையின் தாக்குதலை சவுதி அரேபியா சந்தித்து வருகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் சவுதிக்கு ராணுவ ரீதியாக உதவ பாகிஸ்தான், துருக்கி நாடுகள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.