

வாஷிங்டன்: ஈரான் போரால் கடந்த 5 மாதங்களில் மட்டும் அமெரிக்க ராணுவத்துக்கு ரூ.3.65 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் பாதிப்புகள் குறித்து அமெரிக்க நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் (சிபிஓ) ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்க ராணுவம் அதிநவீன ஏவுகணைகள், வெடிகுண்டுகளை பயன்படுத்தி உள்ளது.
உதாரணமாக ஒரு குறிப்பிட்ட தாக்குதலுக்கு மட்டும் 50-க்கும் மேற்பட்ட டோமாஹாக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. ஒரு டோமாஹாக் ஏவுகணையின் விலை 3.64 மில்லியன் டாலர் (ரூ.30.6 கோடி) ஆகும். ட்ரோன்களுக்காகவும், சைபர் பாதுகாப்பு, உளவு பணிகளுக்காகவும் பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளது.
ஈரான் தாக்குதல்களில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ கட்டமைப்புகள், ஆயுத கட்டமைப்புகள் அழிந்து உள்ளன. இவற்றை சீரமைக்க பெரும் தொகை செலவிடப்பட்டு உள்ளன. ஈரான் போரில் சுமார் 340-க்கும் மேற்பட்ட அமெரிக்க போர் விமானங்கள் ஈடுபட்டு உள்ளன. ஏராளமான போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கில் முகாமிட்டு உள்ளன. போருக்காக புதிய ஏவுகணைகள், வெடிகுண்டுகள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.
ஈரான் போரால் கடந்த 5 மாதங்களில் மட்டும் அமெரிக்க ராணுவத்துக்கு ரூ.3.65 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஈரானுக்கு எதிரான போர் நீடித்தால் அமெரிக்க ராணுவத்துக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.28,767 கோடி இழப்பு ஏற்படும்.
அமெரிக்கா, ஈரான் போரால் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை கணிசமாக அதிகரித்து உள்ளது. இதன் எதிர்விளைவாக அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. விலையேற்றத்தால் ஒவ்வொரு அமெரிக்க குடும்பமும் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய பணவீக்கத்தால் அமெரிக்காவின் கடன் சுமை அதிகரிக்கும். இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.