ரியாத்: இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை குறிவைத்து ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி அரேபிய ஆதரவு பெற்ற அரசுப் படைகளுளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. ஹவுதி கிளர்ச்சிப்படை சவுதி அரேபியாவையும் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், மெக்காவை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று (செப். 15) ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டர்க்கி அல் மல்கி தெரிவித்துள்ளார். தடைசெய்யப்பட்ட வான்வெளிக்குள் நுழைவதற்கு முன்பாகவே, மெக்காவுக்கு தெற்கே ஹவுதி ட்ரோனை சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் முயற்சியை அடுத்து, சவுதி அரேபியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளான மெக்கா, ஜெட்டா, தாயிப் உள்ளிட்டவற்றில் வசிக்கும் மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது. இப்பகுதிகள் மீது வான் தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்பதற்கான இந்த எச்சரிக்கை, இதற்கு முன் இல்லாதது.
இந்த தாக்குதல் காரணமாக, மதினாவில் உள்ள இளவரசர் முகமது பின் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்லும் விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதாக இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாயோம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 14-ம் தேதி, ஏமனில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தினர். இதில், 13 பேர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து மெக்கா மீதான தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதலுக்கு 57 இஸ்லாமிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இஸ்லாமிய கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டர்க்கி அல் மல்கி கூறுகையில், “இது ஒரு கொடூரமான தாக்குதல். இரண்டு புனித மசூதிகளும், யாத்ரீகர்களின் பாதுகாப்பும் மிக மிக முக்கியமானது. தாண்டக்கூடாத எல்லையைக் கொண்டவை அவை. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தயங்காது” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மெக்கா மீது ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுவதை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மறுத்துள்ளனர். மெக்காவை குறிவைப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட தேய்ந்துபோன ஒரு பொய். இது இனி யாரையும் ஏமாற்றாது என்று ஹவுதி அமைப்பின் அரிசியல் பிரிவைச் சேர்ந்த ஹசெம் அல் அசாத் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்களை குறிவைத்து இந்த வாரம் ஹவுதி நடத்திய ட்ரோன் தாக்குதல் காரணமாக பல எண்ணெய் நிலையங்கள் தீப்பற்றி எரிந்தன. இதில், 73 பேர் காயமடைந்தனர். மேலும், கமிஸ் முஷைட்டில் உள்ள கிங் காலித் விமானப்படைத் தளத்தின் மீதும் டஜன் கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தி பெரிய அளவிலான தாக்குதல்களை ஹவுதி நடத்தியது. மேலும், செங்கடலில் சவுதி அரேபிய கப்பல்களை குறிவைத்தும் ஹவுதி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், ஹவுதி - சவுதி அரேபியா இடையேயான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றம், செங்கடலின் முக்கிய வழித்தடத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. பாப் அல் மண்டப் நீரிணை மூடப்பட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று கத்தார் எச்சரித்துள்ளது. நீரிணையை மூடுவது முழு உலகுக்கும் பேரழிவை ஏற்படுத்தும் என்று கத்தார் வெளியுறவு அமைச்சக அதிகாரி இப்ராஹிம் அல் ஹஷ்மி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, போரில் தலையிடுமாறு சவுதி இளவரசர் விடுத்த கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிராகரித்துள்ளார். ஹவுதிகள் கடந்த சனிக்கிழமை அன்று தங்களை தொடர்பு கொண்டு இதில் தலையிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.