

லாகூர்: பிரிவினைக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில் சம்ஸ்கிருத கல்வி கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து கடந்த 1947-ம் ஆண்டு பாகிஸ்தான் தனி நாடாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு முதல்முறையாக சம்ஸ்கிருத மொழிப் பாடத்தை, லாகூர் பல்கலைக்கழக சமூக மற்றும் இலக்கிய அறிவியல் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
சம்ஸ்கிருத மொழி தொடர்பாக 4 பாடத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. முன்னதாக சம்ஸ்கிருதம் தொடர்பான வகுப்புகள் வார இறுதி நாட்களில் நடத்தப்பட்டன. அப்போது மாணவர்கள் காட்டிய ஆர்வத்தால், இந்த பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குர்மானி மையத்தின் இயக்குநர் டாக்டர் அலி உஸ்மான் குவாஸ்மி கூறியதாவது: பஞ்சாப் பல்கலைக்கழக நூலகத்தில் ஏராளமான சம்ஸ்கிருத நூல்கள் உள்ளன. அந்த பொக்கிஷங்களை இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. பல அரிய சம்ஸ்கிருத ஓலைச்சுவடிகளும் அங்குள்ளன. அவற்றை 1930-களில் ஜேசிஆர் ஊல்னர் என்பவர் சேகரித்து தொகுத்துள்ளார். அவற்றை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். தற்போது சம்ஸ்கிருத மொழியைக் கற்பதன் மூலம், அந்த நூல்களில் உள்ள அரிய விஷயங்களை வெளிக்கொணர முடியும்.
அத்துடன், எதிர்காலத்தில் மகாபாரதம், பகவத் கீதை பற்றிய பாடங்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் மகாபாரதம் மற்றும் பகவத் கீதை தொடர்பான பாகிஸ்தான் அறிஞர்களை பார்க்க முடியும். இவ்வாறு உஸ்மான் கூறினார்.
போர்மேன் கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஷாகித் ரஷீத் கூறும்போது, "செவ்வியல் மொழிகளில் இந்த மனித குலத்துக்கு தேவையான ஞானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நான் அரபி, பெர்சியன், சம்ஸ்கிருத மொழிகளை கற்கத் தொடங்கினேன். சம்ஸ்கிருத இலக்கண ஆசிரியர் பாணினியின் கிராமம் பாகிஸ்தானில்தான் உள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தின்போதுதான் நிறைய விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன. சம்ஸ்கிருதம் என்பது ஒரு மலை போன்றது. அது ஒரு கலாச்சார நினைவுச் சின்னம். அந்த மொழி எங்களுக்கும் சொந்தம். ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல" என்றார்.