

வாஷிங்டன்: எச்1பி விசா கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி அமெரிக்காவின் 19 மாகாணங்களின் அரசுகள் சார்பில் மாசச்சூசெட்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா, மாசச்சூசெட்ஸ், அரிசோனா, கொலராடோ, கனெடிகட், டெலவெயர், ஹவாய், இலினொய், மேரிலேண்ட், மிக்சிகன், மினசோட்டா உள்ளிட்ட 19 மாகாண அரசுகள் சார்பில் மாசச்சூசெட்ஸ் மாகாண பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:அமெரிக்க அரசு சார்பில் கடந்த 1990-ம் ஆண்டில் எச்1 பி விசா அறிமுகம் செய்யப்பட்டது.
இதன்மூலம் அமெரிக்க நிறுவனங்கள் திறன்வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்களை தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தி வருகினறன. எச்1பி விசாவுக்கான கட்டணம் 1,000 டாலர் முதல் 7,500 டாலராக (ரூ.1 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை) இருந்தது. ஆனால் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் கடந்த செப்டம்பரில் எச்1 பி விசாவுக்கான கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக (ரூ.88 லட்சம்) உயர்த்தியது. இதனால் கலிபோர்னியா உள்ளிட்ட மாகாணங்களை சேர்ந்த நிறுவனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. எங்கள் மாகாணங்களில் திறன்சார் ஊழியர்களுக்கு மிகப்பெரிய பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. கலிபோர்னியாவின் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருக்கிறது.
ஓராண்டில் 65,000 வெளிநாட்டினருக்கு மட்டுமே எச்1 பி விசா வழங்கப்படுகிறது. அவர்கள் தற்காலிக பணியாளர்கள் மட்டுமே. அவர்களால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது. பணிக்காலம் முடிந்த பிறகு அவரவர் சொந்த நாடுகளுக்கு திரும்பி செல்கின்றனர்.
எச்1பி விசா கட்டண உயர்வால் அமெரிக்க பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக சிறப்பு கல்வி, இயற்பியல், வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சுமார் 17,000 எச்1பி விசாக்கள் வழங்கப்படுகிறது. கட்டண உயர்வால் வெளிநாட்டு மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த முடியவில்லை. இதனால் மருத்துவமனைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு மிகப்பெரிய பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க மக்கள் தொகையில் 18% பேர் மூத்த குடிமக்கள் ஆவர்.
அவர்களின் மருத்துவ சிகிச்சை கேள்விக்குறியாகும் சூழல் உருவாகியிருக்கிறது. எச்1பி விசா கட்டண உயர்வால் அமெரிக்காவின் பொருளாதாரம் மட்டுமன்றி கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும்.
எனவே இந்த விசா கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எச்1பி விசா பெறுவோரில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.