

கிறில் டிமிட்ரீவ்
மியாமி: உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்காவின் அமைதி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ரஷ்ய அதிபரின் தூதர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் போர் சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். அவர் சமீபத்தில் ஒர் அமைதி திட்டத்தை முன்மொழிந்தார். இது தொடர்பாக ஜெர்மனியின் பெர்லின் நகரில் உக்ரைன், ஐரோப்பிய யூனியன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் தூதர் கிறில் டிமிட்ரீவ் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகருக்கு சென்றுள்ளார். அங்கு அதிபர் ட்ரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் ட்ரம்பின் மருமகன் ஜெராட் குஷ்னர் ஆகியோரை டிமிட்ரீவ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரஷ்ய செய்தி நிறுவனமான ஆராஐஏ நவோஸ்டி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிறில் டிமிட்ரீவ் மியாமி நகரில் செய்தியாளர்களிடம் நேற்று முன்தினம் கூறும்போது, “பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடைபெற்று வருகிறது. இன்றும் தொடரும், நாளையும் தொடரும்" என்றார்.
இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி டெலிகிராம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ராஜதந்திர முயற்சிகள் மிக வேகமாக முன்னேறி வருகின்றன, புளோரிடாவில் உள்ள எங்கள் குழு அமெரிக்கத் தரப்புடன் இணைந்து பணியாற்றி வருகிறது" என்றார்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளுடன் தனது தலைமையிலான குழு தனித்தனியாக ஆலோசனை நடத்தியதாக உக்ரைனின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜெலன்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.