

கீவ்: லிபியா கடற்பகுதியில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் அதிநவீன போர்க்கப்பலான மெர்குரி மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: லிபியா கடற்கரைக்கு அப்பால் எங்கள் வீரர்கள் உக்ரைனில் தயாரிக்கப்பட்ட 7 கடற்படை ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். அப்போது எதிரிகளின் அனைத்துத் தடுப்பு முயற்சிகளையும் முறியடித்து, ரஷ்யாவின் போர்க்கப்பலான ‘மெர்குரி’ மூழ்கடிக்கப்பட்டது.
2023-ம் ஆண்டு ரஷ்யக் கடற்படையில் இணைக்கப்பட்ட மிகப் புதிய போர்க்கப்பல்களில் இதுவும் ஒன்றாகும். இந்தத் தாக்குதலில் போர்க்கப்பலுடன் சேர்ந்து ரஷ்யாவின் ‘கேஏ-27’ ரக போர் ஹெலிகாப்டரும் அழிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆயுதங்களைக் கொண்டு செல்ல ரஷ்யா பயன்படுத்தி வந்த ‘எம்.வி. அங்காரா’ என்ற சரக்குக் கப்பலையும் எங்கள் ட்ரோன்கள் துல்லியமாகத் தாக்கின.
இந்த நடவடிக்கைக்காக உக்ரைன் பாதுகாப்பு சேவை மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பாராட்டுகள். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இதனிடையே, தங்கள் நாட்டு கடற்பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு கிழக்கு லிபிய நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.