

பியோங்யாங்: பினான்ஸ் நிறுவனத்தில் ரூ.60 ஆயிரம் கோடி கொள்ளை போனதற்கு வட கொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. பிரபல கிரிப்டோ கரன்ஸி நிறுவனமான பினான்ஸ் கணக்குகளிலிருந்து 6.3 பில்லியன் டாலர்(ரூ.60,000 கோடி) கிரிப்டோ சொத்துகள் கடந்தவாரம் ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டன.
இந்நிலையில், கிரிப்டோ கரன்சியைத் திருடுவது உள்ளிட்ட இணைய வழிக் குற்றங்களுக்காக சிறுவர்களை இளம் வயதிலேயே வட கொரியா தயார்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இளம் வயதிலேயே திறமையான சிறுவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு சைபர் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு ரொக்கப்பணம், ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள், சலுகைகளை வழங்கி, பயிற்சிபெற்ற ஹேக்கர்களின் படையை வட கொரியா உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன்மூலம் இணையக் குற்றங்களில் அந்நாடு ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்க உதவியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஃபெடரல் புலனாய்வு அமைப்பு(எப்பிஐ) மற்றும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பினான்ஸ் ஆகியவை இந்த ரூ.60 ஆயிரம் கோடி திருட்டுக்கு வட கொரிய அரசைக் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் வட கொரிய அரசு மறுத்துள்ளது.
ஹேக்கர்கள் உருவாவது எப்படி?
இதனிடையே, வட கொரியாவின் சைபர் திட்டத்தில் திறமையான சிறுவர்கள் அவர்கள் பள்ளியில் படிக்கும்போது தேர்வு செய்யப்படுவதாகத் தெரியவந்துள்ளது. கணினி அறிவியல் படிப்பதற்காக, வட கொரிய அரசு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 150 முதல் 200 திறமையான மாணவர்களை, அவர்கள் 11, 12 வயதுடையவர்களாக இருக்கும்போதே, தேர்ந்தெடுப்பதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் 17 வயதிலேயே நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு உயர் கல்விக்காக அனுப்பப்படுகின்றனர் என்று கிம் ஹியுங் குவாங் தெரிவித்துள்ளார். இவர் வட கொரியாவிலிருந்து, 2004-ல் தென் கொரியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு முன்பு அரசு ஹேக்கர்களுக்குப் பயிற்சி அளித்த பிரிவிலிருந்து தப்பி வந்தவர்.
அவர் மேலும் கூறும்போது, “இந்த திறமையாளர்கள் வட கொரிய அதிபர் கிம் ஜாங் கின் ரகசிய ஆயுதங்களில் ஒன்றாக செயல்படுகின்றனர். இதுபோன்று ஹேக்கர்களை வட கொரியா தவிர வேறு எந்த நாடும் உருவாக்குவது இல்லை” என்றார்.